புதிய அரசமைப்பு உருவாக்கமும் மாகாண சபைக்கான தேர்தலும்காணாமலாக்கப்படும் தீர்வுகள்! பனங்காட்டான்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 13ம் திருத்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமையை உருவாக்கிய இந்தியா இது விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்குமாயின், இவர்களுடன் தமி;ழர் தரப்பு பேச்சு நடத்துவதால் என்ன பயன்?
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வரையினானே என்று ஒவ்வோர் ஆண்டு நிறைவிலும், புத்தாண்டு பிறப்பிலும் நாம் கூறுவது வழமை.
அரசியல் கருத்தாடல்கள், பத்தி எழுத்தாளர்கள் மறவாது இதனைச் சுட்டி விமர்சிப்பது ஆண்டாண்டுதோறும் இடம்பெறும். இதனை ஒரு முதுமொழியென்றும் கூறுவதுண்டு. பவுணந்தி முனிவர் கூறிய இந்த வாக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் வாழ்வில் எதனைத் தவிர்ப்பது, எது பொருந்திப் போகாதது, எதனை மேம்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற நியாயத்தை தெரிந்து கொள்ளலாம்.
இதில் முக்கியமானது அரசியல். அரசியலை ஆங்கிலத்தில் பொலிரிக்ஸ் என்பர். இது பொலிறிக்ஸ் என்ற பெயரிலிருந்து பெயர்ந்ததாகக் கூறுவர். பொலி என்றால் பல என்றும் றிக்ஸ் என்றால் தநதிரம், வஞ்சகம் என்றும் அகராதி அர்த்தம் சொல்கிறது.
ஆக, ஏமாற்றுத்தனம், தந்திரப் போக்கு என்பவைகள் பொலிறிக்ஸின் ஆதாரங்கள் என்று கொள்ளப்படுகிறது. இதனை தங்கள் வாழ்வாகக் கொள்ளும் அரசியல்வாதிகள் யார் என்பதை இதனூடாக அறிந்து கொள்ளலாம். அரசியலும், அரசியல்வாதிகளும் பொதுவாழ்வில் பிரிக்க முடியாதவர்கள். இவர்களைப் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் மக்கள் வாழப் பழக வேண்டுமென்பதை, நம்ப நட நம்பி நடவாதே எனக் கொள்ளலாம்.
புதுவருடத்தில் எதிர்பார்ப்பவைகளை எழுத முனையும்போது ஒன்றே ஒன்று முதலில் வரும். அது கடந்தாண்டின் கடைசி வாரத்தில் அல்லது இந்த ஆண்டின் முதல்வாரத்தில் எழுதப்பட்ட விடயமாக இது இருக்கும். கடந்த வருட கடைசியில் இப்பத்தியை எழுதும்போது அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களின் மீள்பார்வையாக இருந்தது. ஆட்சித் தலைவர் ஒருவரின் ஆளுமையைத் தரிசிப்பதற்கு அவரது பதவிக்கால முதல் நூறு நாட்கள் போதாது. இருப்பினும், அவரது பாதை எதை நோக்கியதாக உள்ளதென்பதை ஓரளவு கண்டுகொள்ள இக்காலம் பயன்பட்டது.
இவரது தேர்தல் கால மகுட வாசகமாக ஊழல் ஒழிப்பும், வறுமை ஒழிப்பும் அமைந்திருந்தன. இவரது தேசிய கொள்கையாக, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் அமைப்பு, விரைவான மாகாண சபைத் தேர்தல் என்பவை இடம்பெற்றன. முன்னைய இரண்டும் நாடு முழுவதுக்குமானதாகவும், பின்னைய இரண்டும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளாகவும் தோற்றம் காட்டின.
முன்னைய ஆட்சிக் காலங்களில், முக்கியமாக ராஜபக்ச குடும்ப ஆட்சியின்போது உச்சத்தைத் தொட்ட ஊழலை ஒழிப்பதும், ஊழல்வாதிகளை அடையாளம் காண்பதுமாகக் காட்டி சட்டத்தின் முன் நிறுத்துவதே அநுர குமரவின் தலையாய செயற்பாடாக நம்பிக்கை தரப்பட்டது. ஊழல்வாதிகளால் முடக்கப்பட்ட கோடானுகோடி பணம் நாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் மேடைகளில் கூவிக்கூவி சொல்லப்பட்டது.
கடந்த பதினைந்து மாத ஆட்சியில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்சி ஏற்படுத்தப்பட்டது. முன்னைய ஆட்சிக் காலங்களில் ஊழல், மோசடி, லஞ்சம் தொடர்பாக பலர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், எவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட பணத்தில் ஒரு ரூபா கூட இன்னமும் மீட்கப்படவில்லை. இது தொடர்பாக எவர்மீதும் குற்றப்பத்திரிகையும் தாக்கலாகவில்லை. கொழும்பு சொகுசு வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சொந்த ஊரான அம்பாந்தோட்டைக்கு தமது மூட்டை முடிச்சுகளுடன் சென்ற மகிந்த ராஜபக்ச, நோயாளி என்ற பெயரில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொழும்பு திரும்பி, இ;ப்போது கொழும்பில் குடியேறியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மகன் நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியலுக்கு இது தேவையாக உள்ளது. அதேசமயம், உகண்டாவில் பதுக்கப்பட்டதாக தேர்தல் காலங்களில் கூறிய பணத்தை மீட்டு வாருங்கள் என ஆட்சித் தரப்பைப் பார்த்து நாமல் நையாண்டிச் சவால் விடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது.
அதேசமயம், அரசாங்க தரப்பிலும் பலர் மீது பல்வகையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடும், அது இன்றியும் சுமத்தி வருகின்றனர். அநுர குமர அரசின் முதலாவது சபாநாயகரான அசோக ரண்வெல தேர்தல் காலத்தில் தமது கலாநிதி பட்டங்கள் பற்றி கூறியதை நிரூபிக்க முடியாததால் பதவி துறக்க நேர்ந்தது. வருமானத்துக்கு மேலதிகமாக சொத்துச் சேர்த்ததாக வணிகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுர ஜெயசேகர போர்க்காலக் குற்றங்களிலும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிலும் சம்பந்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. எரிசக்தி அமைச்சர் குமர ஜெயக்கொடி முன்னர் உரக்கூட்டுத்தாபன தலைவராக இருந்தபோது அரசாங்கத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீதும் எதிரணியினர் நாடாளுமன்றத்தில் குற்றங்களை முன்வைத்துள்ளனர்.
இவைகள் எதற்கும் ஆட்சித் தரப்பிலிருந்து பதிலளிக்கப்படவில்லை. நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இவைகளை ஜனாதிபதி அநுர குமர கண்டுகொள்ளவும் இல்லை.
மிக முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு பற்ற நம்பகமான பதில் அரச தரப்பில் காணப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளின் பின்னரே புதிய அரசியலமைப்பு பற்றி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேசிய மக்கள் சக்தியின் தாய்க் கட்சியான ஜே.வி.பி. இந்த வருட முற்பகுதியில் தெரிவித்திருந்தது. அப்படியானால் அந்த அறிவிப்பு வரவே இன்னும் இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
புதிய அரசமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழரசு கட்சி உட்பட அனேகமான எதிர்கட்சிகளும் குரலளவில் முனைப்புக் காட்டுகின்றன. ஆனால் இவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாதுள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்க அநுர அரசுக்கு வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இதற்கு ஏற்றதாக உள்ளது என்றும் சர்வதேச சிறுபான்மையினர் குழு வலியுறுத்தியுள்ளதாக இதனை எழுதும்போது ஒரு செய்தி வந்துள்ளது. வரவேற்க வேண்டிய அறிக்கை இது. ஆனால், யார் காதில் விழப்போகிறது?
1972ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோதபாய ஆகிய அனைவருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தது. அநுர குமர மட்டும்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றியதாக சொல்ல முடியாது.
சிங்களத் தரப்பில் துணிச்சல் இருந்திருந்தால் 1972, 1978 ஆண்டுகளில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டபோது இதனைச் செய்திருக்க முடியும். ஆனால், எல்லோருமே சிங்களத் தலைமைகளாகவும், சிங்களவர்களே ஆளும் இனமாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஆட்சி புரிந்ததால் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லாததாகவே போய்விட்டது.
இறுதியாக, மாகாண சபைத் தேர்தலை பார்க்கலாம். இத்தேர்தலுக்கு நிதி ஒதுக்கிவிட்டு பின்னர் நிதி இல்லையென்று காரணம் கூறி தேர்தலை நடத்தாது விட்டவர் ரணில் விக்கிரமசிங்க. இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் நல்லதொரு வசதியான உதாரணம் கிடைத்துள்ளது. நாட்டை மீழெழுப்புவதற்கு மட்டுமே முக்கியத்துவம் என்று கூறி தேர்தலை காலவரையறையின்ற ஒத்தி வைக்கலாம்.
தேர்தல் நிச்சயம் நடைபெறுமென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கிளிப்பிள்ளைபோல சொல்லி வருகிறார்கள். 2026ல் இது நிச்சயம் நடைபெறுமென சில மாதங்களுக்கு முன்னர் சொல்லப்பட்டது..
டித்வா புயல் பேரிடரிலிருந்து நாட்டை மீழெழுப்ப வேண்டுமெனும் முக்கியத்துவம் இன்று முதன்மை பெற்றுள்ளது. இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் நடத்த முடியாதென்று கூறுவதற்கு ஆட்சித் தரப்புக்கு இது ஒரு நல்வாய்ப்பு. மக்கள் வாழ்வை புனரமைக்க சர்வதேசம் வழங்கும் நிதியுதவியை தேர்தல் நடத்துவதற்கு பயன்படுத்த முடியாதென ஒரேயடியாக தள்ளிவிடவும் ஆட்சியினர் முன்வரலாம்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தங்கள் இஷ்டப்படி முடிவு செய்து, அதனடிப்படையில் 13ம் திருத்தத்தை ஏற்படுத்தி, அதனூடாக மாகாண சபை முறைமையை அறிமுகம் செய்த இந்தியா இப்போது அதனை ஓரம் தள்ளிவிட்டதுபோல செயற்படுகிறது. தமி;ழர் தரப்பினரை சந்திக்கும்போது மட்டும் இது விடயத்தில் தாம் அக்கறை உள்ளவர்கள்போல காட்டிக்கொள்ளப்படுகிறது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய கூட்டணியும் சந்தித்த போது இவ்விடயத்தில் இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டுமென வாய் மூலமும் எழுத்து மூலமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் ஜெய்சங்கர் சரியான பதில் எதுவுமே கூறாது மழுப்பிவிட்டார். 2024ம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சந்திப்பில் தமி;ழர் பிரதிநிதிகளைப் பார்த்து இல்லாததை கேட்பதைவிட இருப்பவைகளை முழுமையாக பயன்படுத்துங்கள் என்று புரியும்படியான ஆலோசனையைக் கொடுத்தவர் இதே ஜெய்சங்கர்.
ஜனாதிபதி அநுரவைச் சந்தித்த இவர் இந்தியா இருக்க பயமேன் என்று கூறி 450 மில்லியனையும் இந்திய உதவியாக வழங்கிவிட்டு, தமிழர் பிரதிநிதிகளுக்கு பெப்பே காட்டிச் சென்றுவிட்டார். இவரைச் சநதித்த தமிழர் பிரதிநிதிகள், யாவும் அக்களத்தே விட்டு வெறுங்கையோடு ஷவீடு| திரும்பினர்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்துக் களமாடிய ஜே.வி.பி.யின் பிரதிநிதியான அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியானதும் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கானது என்பதை நினைவில் கொண்டால் - பழையன கழிந்ததும் புதியன புகுந்ததும் புரியும்.

Post a Comment