" தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்" - சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் தேசிய மக்கள் சக்தியினர் குழப்பம்
" தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்" என பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் எனும் அடையாளத்துடன் யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது
கூட்டம் ஆரம்பம் முதலே கூச்சல் குழப்பங்களுடன் நடைபெற்று வந்த நிலையில் , கூட்டம் இறுதி கட்டத்தை நெருங்கிய வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.
அதற்கு கடற்தொழில் அமைச்சர் , தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதற்காக விகாரையை உடைக்க முடியாது என கூறினார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , ஏன் உடைக்க முடியாது ? தென்னிலங்கையில் சட்டவிரோத விகாரைகளை உடைக்க வில்லையா ? இது இராணுவத்தினரால் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட ஒரு சட்ட விரோத கட்டுமானம் அதனை உடைப்பதில் என்ன தடை என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் பதில் செல்ல முடியாது மென்று விழுங்கிக்கொண்டிருந்த வேளை கூட்டத்தில் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் கலந்து கொண்ட கரவெட்டி பிரதேச சபையின், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் " தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம் " எங்கள் கிராமத்தில் கோவில் பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது தொடர்பில் பேச வேண்டும் என கூறினார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் . அமைச்சர் முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும் ,அதன் பின்னர் உங்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவோம் என கூறிய போதிலும் , கரவெட்டி பிரதேச உறுப்பினர் இல்லை என குழப்பத்தில் ஈடுபட்டார்.
பிரதேச சபை தவிசாளர்களும், தையிட்டி விகாரை பிரச்சனை முக்கியமானது அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அமைச்சர் பதில் அளிக்கட்டும் , அதன் பின்னர் உங்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவோம் என கூறினார்கள்.
அதன் போது , குறித்த நபருக்கு அருகில் இருந்த வேறு சில தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களும் கூச்சல் எழுப்பு குழப்பத்தை உருவாக்கினர்.
அதனை சாதகமாக பயன்படுத்திய கடற்தொழில் அமைச்சர் இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது என அறிவித்து, தையிட்டி விகாரை தொடர்பில் எந்த கருத்தும் கூறாது கூட்டத்தை விட்டு வெளியேறினார்
அதனை அடுத்து , தையிட்டி விகாரை பிரச்சனை கூட்டத்தில் பேசப்பட்ட வேளை தங்கள் பிரச்சனைகளை கேளுங்கள் என குழப்பத்தில் ஈடுபட்ட கரவெட்டி பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உள்ளிட்ட குழாம் ஒன்று கூட்டம் நடைபெற்ற மேடையை நோக்கி சிரிப்புடன் ஓடிச்சென்று , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் கூடி குழாவியதை அவதானிக்க முடிந்தது.
மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளத்துடன் , மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களை கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிப்பதாகவும் , அவர்கள் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசும் போது , குழப்பங்களை ஏற்படுத்தி , அவ்விடயங்களை திசை திருப்பி தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னடுக்க அரசியல் நோக்குடன் தடைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment