பிரஜா சக்திக்கு யாழில் வலுக்கும் எதிர்ப்பு - தவிசாளர்கள் போர்க்கொடி


அரசியல் நியமனங்களை  அரச அதிகாரிகளை மேற்கொள்ளச் செய்யும்  அடக்கு முறையான ஆட்சியின் கீழ் அரச அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர் இது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றை நாடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளனர். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் பிரஜா சக்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு , அதனூடாக கிராம மட்டத்தில் "சமூக அபிவிருத்தி குழு " என உருவாக்கி அதன் தலைவராக கட்சியின் உறுப்பினர் ஒருவரை பிரதேச செயலர் நியமித்து , அவருக்கான நியமன கடிதங்களையும் வழங்கி வருகின்றனர். 

அதனை தொடர்ந்து குறித்த குழுவின் தலைவராக செயற்படுபவர்கள் கிராம மட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் , பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் , மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை பின் தள்ளி , முன் வரிசைகளில் அமர்ந்திருந்து அரசாங்கத்தின் திட்டங்களை ஆமோதித்து நடைமுறைப்படுத்தும் போக்கினை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. 

இந்நிலையில் குறித்த நியமனம் குறித்து பிரதேச சபை தவிசாளர்கள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்ற நாடுவோம் 

இது தொடர்பில் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி மன்ற சட்டங்களின் பிரகாரம் தேர்தல் மூலம் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக அதிகாரம் வழங்கப்பட்ட கட்சி சார்பு கிராம மட்ட  தலைவர் ஒருவரை நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை மலினப்படுத்தி சர்வாதிகார ஆட்சியை கொண்டு பலப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் போட்ட திட்டமே கிராம அபிவிருத்தி குழு. 

இதனூடாக தேசிய மக்கள் சக்தியினர் கிராமங்களில் தமது அரசியலை மேற்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்த முயல்கின்றனர். 

குறித்த நியமனம் தொடர்பில் நாம் விரிவாக ஆராய்ந்து நீதிமன்றத்தை நாடுவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார். 

அரசியல் நியமனங்களை அதிகாரிகளை  மேற்கொள்ளச் செய்யும்  அடக்கு முறையான ஆட்சி  

வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கையில், 

தேசிய மக்கள் சக்தி அரச அதிகாரிகளை தவறாக வழி நடத்தும் செயற்பாடு தான் இந்த கிராம அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம். 

ஒரு பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி குழு தலைவரை அமைப்பதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் குறித்த நியமானத்தை வழங்கும் அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம். 

அரசியல் நியமனங்களை  அதிகாரிகளை  மேற்கொள்ளச் செய்யும்  அடக்கு முறையான ஆட்சி காணப்படுகிறது 

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் ஏனைய தவிசாளர்களுடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எடுப்போம் என்றார்.

 கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் பறிக்கப்படும் அதிகாரம்   

ஊர் காவற்துறை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா 

கடந்த கால ஆட்சிகளை விட மோசமான முறையில் மக்களை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாடு கிராம மட்ட அபிவிருத்தி குழு தலைவர். 

இந்த நியமனம்   பிரதேச அபிவிருத்தி குழு தலைவரின் சிபாரிசின் பெயரில் நியமிக்கப்படுகிறார் அவரின் கீழ் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி குழு உத்தியோத்தர் கடமையாற்ற வேண்டிய இக்கட்டான நிலையை பிரதேச செயலாளரின் கடிதம் பிரதிபலிக்கிறது. 

அது மட்டும் அல்லாது உள்ளூராட்சி மன்றங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் பங்கு பெற்றுவதற்கான மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால்   அரசியல் கட்சியின் சிபாரிசினால் பிரதேச செயலாளரால் நியமிக்கப்படுகின்ற கிராம அபிவிருத்தி குழு தலைவர் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்குபடுத்துவதற்கான சந்தர்ப்பம் பிரதேச செயலாளரினால் வழங்கப்படுகிறது. 

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை புறம் தள்ளி ஒரு கட்சி சார்ந்த பிரதிநிதிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

மேலும் கிராம அபிவிருத்தி குழு தலைவரின் நியமன கடிதத்தில் நியமிக்கப்படுபவர் அரச உத்தியோகத்தராக கருதப்பட மாட்டார் என கூறிவிட்டு அடுத்த பந்தியில் சமூக அபிவிருத்திக் குழுக்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிராம மட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட கிராம உத்தியோகத்தரை புறந்தள்ளி அரசியல் அதிகாரங்களை கிராம மட்டங்களில் பலப்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டமே இந்த கிராம அபிவிருத்தி குழு திட்டம் என தெரிவித்தார்.


No comments