ஒன்லைன் கேம் விளையாட காதலனின் தாயாரின் நகைகளை திருடிய கிளிநொச்சி பெண் கைது
நிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்த நிலையில் , இளைஞனின் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்தமையால் யுவதி சில நாட்கள் இளைஞனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் , வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த இளைஞனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. அது தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தாயார் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் தாயாரின் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளில் தாலிக்கொடி உள்ளிட்ட ஒரு தொகுதியை , சாவகச்சேரி பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்ததாகவும் , மற்றுமொரு தொகுதி நகைகளை யாழ் . நகர் பகுதியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் , தெரிவித்துள்ளார்
ரிக்ரொக்கில் அறிமுகமான நண்பன் ஒருவருடன் தான் , ஒன்லைன் கேம் விளையாடுவதாகவும் , அதற்கு இதுவரையில் சுமார் 27 இலட்ச ரூபாய் வரையில் செலவழித்து உள்ளதாகவும் , மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் நகைகளை திருடியதாகவும் அப்பெண் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அத்துடன் அப்பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை , இவ்வாறான ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட , தனது நகைகளை விற்று பணம் செலுத்திய பெண்ணொருவர் , வீட்டில் பெற்றோர் நகைகள் தொடர்பில் கேட்ட போது அவை களவு போனதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதனை அடுத்து பெற்றோர் குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் , அப்பெண்ணே , தனது நகைகளை விற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து பெண்ணை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்தனர்
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இணைய விளையாட்டுக்களில் பெரும்பாலான இளையோர் பெருந்தொகை பணத்தினை இழந்து வருவதுடன் , கடந்த மாதம் இரு இளைஞர்கள் இணைய விளையாட்டுக்காகக பணம் செலுத்த பெருந்தொகைகளை கடன் பெற்று , கடன் சுமையினால் தமது உயிரை மாய்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment