இந்தியாவிடமிருந்து நிவாரணம்:புதிய வியாபாரம்?



இலங்கையில் இந்தியப்படைகளால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பிற்கு பொறுப்புக்கூறவேண்டிய இந்திய அரசை நிவாரணங்கள் மூலம் காப்பாற்ற உயர்மட்ட சதிகள் முன்னெடுக்கப்படுகின்றதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்திய அமைதிகாக்கும் படையினரால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் எனும் அரசசார்பற்ற அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு எனும் பெயரிலான அமைப்பின்  அனுசரணையுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது நிகழ்ந்த இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையினை முன்னிறுத்த சில தரப்புக்கள் முற்பட்டுள்ளன.

இந்திய தூதரக நிகழ்ச்சி நிரலின் கீழ் நிவாரணங்கள் மூலம் மக்களது வாய்களை அடைக்க இத்தகைய போலிகளிற்கு யார் அனுமதி வழங்கியதென பாதிக்கப்பட்ட அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் என தன்னை தெரிவித்துள்கொள்ளும் அனந்தராஜ் பின்னணியில் இந்திய அரசை பொறுப்புக்கூறலில் காப்பாற்ற சதிகள் முன்னெடுக்கப்படுகின்றதென குற்றஞ்சாட்டப்படுகின்றது.

 உயிர் இழப்பிற்கான இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட முடிவினை உதாரணமாக பின்பற்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிர் இழப்பிற்கு 10 மில்லியன் இலங்கை ரூபாய்களை இழப்பீடாக வழங்கியதன் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி 450 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் ஆகும். அதனடிப்படையில் வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 66 பேருக்கும் 29.75 மில்லியன் (29,750,574.00) ரூபா இழப்பீடாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்த 36 பேருக்கான இழப்பீடாக 1.38 மில்லியன் (1,380,025.00) ரூபாவும், அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடாக 57.59 மில்லியன் (57,597,068.00) ரூபாய்களுமாக மொத்தமாக 88.72 மில்லியன் (88,727,667.00) ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வட்டியாக 4.43 பில்லியன் (4,433,174,088.00) ரூபாய் சேர்த்து 4.5 பில்லியன் (4,521,901,754.00) ரூபாய் தொகையினை இழப்பீடாக வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், அனந்தராஜ், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல், தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், என பலரும் கலந்துகொண்டிருந்தபோதும் தொடர்புடைய பிரதேசமான வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் முதல் உறுப்பினர்கள் வரை புறக்கணித்திருந்தனர்.குறிப்பாக வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக கடமையேற்கவுள்ள மூத்த அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அழைப்புக்கூட வழங்கப்பட்டிருக்கவில்லையென தெரியவருகின்றது. 


No comments