கிராஞ்சி மக்கள் நடு வீதியில்



ஜனாதிபதி முதல் ஆளுநர் ஈறாக மக்கள் தாங்களாக முன்வந்து தங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுகையில் அவ்வாறு முன்வந்த மக்களை காவல்நிலையத்திற்கு அலைக்கழித்த பரிதாபம் பூநகரியில் அரங்கேறியுள்ளது.

ஆட்சிகள் மாறினாலும் கண்டுகொள்ளப்படாத தமிழ் பிரதேசங்களில் ஒன்றாக இருப்பது கிராஞ்சி.பூநகரி பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய இப்பிரதேசத்திலிருந்து சுண்ணக்கல் அகழ்ந்தெடுத்து சீமெந்து தொழிற்சாலை அமைக்க முற்பட்ட முயற்சி கடந்த ஆண்டில் அரங்கேறியிருந்தது.

வருட இறுதிக்காலத்தில் மழை பெய்தால் பிரதான வீதி வெள்ளத்தினுள் மூழ்கிவிடுவதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளுள் முடங்கியிருப்பது வழமையாகும். அப்பிரச்சினையினை தீர்க்க முன்னைய அமைச்சர்கள் முதல் தற்போதைய அமைச்சர்கள் வரை அடிக்கல் நாட்டி வைத்த பல்லவராயன்கட்டு –கிராஞ்சி வீதி அடிக்கல்லுடனேயே நிற்கின்றது.

இந்நிலையில் அரசுகளை நம்பி பயனில்லையென புறப்பட்ட கிராஞ்சி பொது அமைப்புக்கள் தமது இழுவைப்பெட்டிகள் மூலம் வீடுகளில் கிணறுகள் வெட்டுகையில் கிடைத்த மண்ணினை நிரவி தமது வீதிகளை துவிச்சக்கரவண்டிகளில் பயணிக்கவேனும் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைக்க முற்பட்டன.

ஆனாலும் அதனை கூட பொறுத்துக்கொள்ள முடியாத கிராமசேவையாளர் ஒருவர் காவல்துறைக்கு தகவல்கொடுக்க காவல்துறையோ பதினையாயிரம் இலஞ்சம் கோரியிருக்கிறது. அதற்கு பொது அமைப்புக்கள் இணங்காத நிலையில் நீதிமன்றிற்கு இழுவைப்பெட்டி உரிமையாளரை அழைத்துள்ளது காவல்துறை.

இதனையடுத்து தாமாக உதவ வந்திருந்த ஊரிலுள்ள டிராக்டர் இழுவைப்பெட்டிகாரர் வீதி திருத்த வேலைகளை கைவிட்டுச்சென்றுவிட்டதாக பொது அமைப்புக்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெரும் பிரச்சாரங்களுடன் கிளிநொச்சிக்கு வீதி அமைக்கவென ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் நிதியில் கிளிநொச்சி நகரிலுள்ள வீதிகளிற்கு காப்பெற் அமைக்க மாவட்ட செயலகம் திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.


No comments