பொரிமா தோண்டியை நினைவூட்டும் மாகாண சபைகளுக்கான தேர்தல்! பனங்காட்டான்
'மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே உள்ள சட்டம் ரத்துச் செய்யப்பட்டு அதன் இடத்துக்கு தயாரிக்கப்பட்ட புதிய சட்டத்தொகுப்பு 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் நாடாளுமன்றமே ஒரு முடிவை எடுக்க வேண்டும். எல்லை நிர்ணயம் 2018ல் வழங்கப்பட்ட 50:50 கலப்பு விகிhசார பிரதிநிதித்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதி. அதன் பணிகள் முடிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இதற்குப் பொறுப்பான அமைச்சர் உட்பட முழு நாடாளுமன்றமும் அதனை எதிர்த்தது. இதனால் சட்டம் இன்னும் நிறைவேறாததால் மாகாண சபை தேர்தல் பாதிக்கப்பட்டுள்ளது" - இது தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவித்தல்.
தமிழர்களின் அரசியல் முனைப்பை எப்போதும் பருவகால நிகழ்வாகப் பார்க்கலாம். அவ்வப்போது எது பேசுபொருளாக இருக்கிறதோ அதனை ஒட்டியதாக, போட்டி போட்டுக் கொண்டு கூட்டங்களும் அறிக்கைகளும் எதிர்வினைகளும் வரும்.
சில வாரங்களுக்கு முன்னராக செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் பரபரப்பானதாக இருந்தது. புதைகுழியை தொடர்ந்து தோண்டுவதற்கு நிதி கிடைக்கவில்லையென பல செய்திகள் வந்தன. நிதி கிடைத்ததும் மழை காலம் அதற்கு விரோதியாக அமைந்ததால் இனி நவம்பர் மாதத்தின் பின்னரே இதற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
கடந்த சில வாரங்களாக ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் பேசப்பட்டது. தமிழர் தரப்பு அங்கு உருப்படியாக எதனையும் செய்யவில்லை. தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றாரா அல்லது தனிப்பட்ட முறையில் சென்றாரா என்ற கருத்தரங்கு ஒரு வாரமாக ஓடியது.
இப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரபல்யமாகி நிற்கிறது. தேர்தல் நடைபெறுமா நடைபெறாதா என்பது யாருக்கும் தெரியாது. லஞ்சம், ஊழல், போதை ஒழிப்பை தெற்குக்கு காட்டும் அநுர குமர அரசு, தமிழருக்கு மாகாண சபையைக் காட்டுகிறது. எப்பொழுதுமே தேர்தல் வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அது நடைபெறும் என்று கூறிவிட்டால், அவர்கள் அவர்களுக்குள்ளேயே அடிபட்டுக் கொள்வார்கள் என்ற நண்டுச் சித்தாந்தத்தை புரிந்து கொண்ட சிங்கள தேசம் அதனை கையாண்டுள்ளது.
மாகாண சபைக்கான தேர்தல் நிச்சயம் நடைபெறும், அடுத்தாண்டு நடைபெறும், மார்ச் மாதத்துக்குப் பின்னர் நடைபெறும், எந்த அடிப்படையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் என்று பலவாறான செய்திகள் திட்டமிட்டு அரச தரப்பால் பரப்பப்படுகிறது. முக்கியமாக அவர்களின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஊடாகவே இந்தப் பரப்புரை இடம்பெறுகிறது.
அவ்வப்போது வெளிவரும் செய்திகளை படிக்கும்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுமென்ற நம்பிக்கை அதிகரிக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் தங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. அண்மையில் டான் தொலைக்காட்சியில் தமிழ் அரசியல் பரப்பில் நன்கறியப்பட்ட வரதராஜப்பெருமாள், வடமாகாண சபையின் முன்;னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த காண்டீபன் ஆகியோர் இது தொடர்பான கருத்தாடலில் பங்குபற்றியிருந்தனர்.
தமிழ் ஊடகங்களும் இத்தேர்தலுக்குத் தயாராகி வருவதுபோல செய்திகளையும் விமர்சனங்களையும் அவதானிக்க முடிகிறது. கொள்கைக் கூட்டாக கஜேந்திரகுமாருடன் இணைந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களுக்குள் இது தொடர்பாக ஒரு சந்திப்பை கடந்த வாரம் நடத்தியிருந்தனர். இதன் பின்னர் இக்குழுவைச் சேர்ந்த பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்து கஜேந்திரகுமார் தலைமையிலான கொள்கைக் கூட்டை விட்டு வெளியேறுவது போல காணப்பட்டது.
அதேசமயம், தங்களின் கூட்டத்துக்கு தம்pழரசு கட்சியையும் அழைத்ததாகவும் சுகயீனம் காரணமாக சுமந்திரன் பங்குபற்றவில்லையெனவும் ஒரு செய்தி வெளியானது. இது உண்மையாக இருக்குமாயின், கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம் இதில் பங்குபற்றியிருக்கலாம். 'தமிழரசு கட்சியே பெரிய கட்சி. மற்றைய கட்சிகள் எங்களுடன் இணையலாம். நாங்கள் அவர்கள் எவருடனும் இணையத் தேவையில்லை" என்று முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் சுமந்திரன் சொன்னதை இப்போது ஞாபகப்படுத்தின் இதற்குரிய பதில் அடங்கும்.
1987ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் பிரசவமான மாகாண சபை முறைமை தமிழருடைய அரசியல் பிரச்சனை தீர்வுக்கானது என சொல்லப்பட்டது. அப்போது, தமிழ் காங்கிரஸ் தவிர மற்றைய அனைத்துக் கட்சிகளும் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு குடையின் கீழ் இருந்தன. கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளில் ஒரேயொரு தடவை மட்டுமே வடமாகாண சபைக்கு தேர்தல் இடம்பெற்றது. முப்பத்தெட்டு ஆசனங்களில் முப்பதை இலகுவாக கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசு சார்பில் இனிவரும் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தாம் போட்டியிடவுள்ள விருப்பத்தை சுமந்திரன் ஏற்கனவே அறிவித்துள்ளார். கட்சி இன்று அவரது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரே இப்பதவிக்கு போட்டியிட முடியும்.
மாகாண சபை முறைமையை இந்திய தரப்பு இப்போது பட்டும்படாமலும் கையாளுகிறது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டு வருவதை இந்தியா தனது பொழுதுபோக்காக எடுத்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையின் கூட்டத்திலும் இந்தியா இதனை தெரிவித்தது. தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உரையாடும்போது இதனை வேறு விதமாகக் கையாள்கிறது. மாகாண சபையிலுள்ள அதிகாரங்களை முதலில் முழுமையாக பயன்படுத்துங்கள் என்பதும், தமி;ழர் தரப்பு ஒன்றுபட்டு ஒரு குரலில் வருவதில்லையென்பதும் இந்தியாவின் வாய்ப்பாடு.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்ட முக்கிய காலமான 1988 முதல் 1990 வரை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் முதலாவது செயலாளராக இருந்தவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவரது இணையத்தள தகவலின்படி இந்திய அமைதி காக்கும் படைக்கும் இவரே ஆலோசகராக இருந்துள்ளார். தற்போது இவர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராகவுள்ளார். இந்தப் பின்னணியில் பார்க்கையில் 13ம் திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் நன்கறிந்த இவரால் இலங்கை அரசுடன் ராஜதந்திர ரீதியாக இதனைக் கையாள முடியும். எப்போதுமே தம்pழர் தரப்பை சந்திக்கும்போது இருப்பதை சரியாகப் பயன்படுத்துங்கள் என்று சொல்வதே தமது கடமை என இவர் நினைக்கிறார்.
அநுர குமர அரசின் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளார். இந்திய பிரதமர் மோடியையும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இவர் தனித்தனியாக சந்தித்து உரையாடியுள்ளார். வெளிவந்துள்ள செய்திகளின்படி இச்சந்திப்புகளின் போது இலங்கையின் கல்வி அபிவிருத்தி உட்பட பல்வேறு உதவிகளை வழங்குவதே இங்கு பேசப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமது பதவி வழியாக இலங்கை-இந்திய அமுலாக்கல் பற்றி பேசும் உரிமை உடையவர். ஆனால் அதனை தவிர்த்து விட்டார்.
சமவேளையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோ~; ஜா கடந்த 13ம் திகதி ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு, அபிவிருத்தி உதவிகள் பற்றியே இங்கு பேசப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் இருவரும் சந்தித்துப் பேசியபோது காற்றாலை தொடர்பாகவும், பொருளாதார அபிவிருத்தி பற்றியும் பேசப்பட்டது. ரில்வின் சில்வா ஆட்சியில் எந்த அமைச்சர் பதவியும் வகிக்கவில்லை. ஆனாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூக்கணாங்கயிறாக ரில்வின் சில்வாவே இருக்கிறார் என்பதை நிச்சயப்படுத்தியதாலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெறுகின்றன. எனினும், தமிழருக்கான அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி மறந்தும்கூட இவர்கள் பேசுவதில்லை.
ஊடகங்கள் வழியாக மாகாண சபைத்; தேர்தலை வெளிப்படுத்தி வரும் இலங்கை அரசு இதுபற்றி எந்தத் தகவலையும் இந்திய அரசுக்கு இதுவரை பகிர்ந்ததாகத் தெரியவில்லை. இதனூடாக ஒரு விடயத்தை அது என்னவென்று இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
அதேசமயம், மாகாண சபை தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்க கடந்த வாரம் மிகமிக முக்கியமான விடயமொன்றை தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த இப்போது நாட்டில் எந்தச் சட்டமும் இல்லையென்று பகிரங்கமாகவே கூறியுள்ளார். இதனை பின்வருமாறு அவர் விளக்கியுள்ளார்:
'மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே உள்ள சட்டம் ரத்துச் செய்யப்பட்டு அதன் இடத்துக்கு தயாரிக்கப்பட்ட புதிய சட்டத்தொகுப்பு 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றமே முழுப்பொறுப்பு. இந்த விடயத்தில் நாடாளுமன்றமே ஒரு முடிவை எடுக்க வேண்டும். எல்லை நிர்ணயம் 2018ல் வழங்கப்பட்ட 50:50 கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதி அதன் பணிகள் முடிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இதற்குப் பொறுப்பான அமைச்சர் உட்பட முழு நாடாளுமன்றமும் அதனை எதிர்த்தது. இதனால் சட்டம் இன்னும் நிறைவேறாததால் மாகாண சபை தேர்தல் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
'மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே உள்ள சட்டம் ரத்துச் செய்யப்பட்டு அதன் இடத்துக்கு தயாரிக்கப்பட்ட புதிய சட்டத்தொகுப்பு 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றமே முழுப்பொறுப்பு. இந்த விடயத்தில் நாடாளுமன்றமே ஒரு முடிவை எடுக்க வேண்டும். எல்லை நிர்ணயம் 2018ல் வழங்கப்பட்ட 50:50 கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் ஒருங்கிணைந்த பகுதி அதன் பணிகள் முடிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இதற்குப் பொறுப்பான அமைச்சர் உட்பட முழு நாடாளுமன்றமும் அதனை எதிர்த்தது. இதனால் சட்டம் இன்னும் நிறைவேறாததால் மாகாண சபை தேர்தல் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
யதார்த்தம் இப்படி இருக்கையில், மாகாண சபை தேர்தலுக்கு தமிழர் தரப்பு தலைப்பாகை கட்டி, பூமாலை சூட்டி ஆயத்தப்படுவதைப் பார்க்கும்போது
பொரிமாதோண்டியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.
Post a Comment