இசைப்பிரியா படுகொலை - முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது:-
இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம்.
எனினும், இறுதிப்போரின் போது இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் இன்றளவும் பெரும் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவற்றில் ஒன்று இசைப்பிரியாவின் படுகொலை. இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப் பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று உறுதியாகக் கூறுகின்றேன். இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.
அத்துடன், சரணடைந்த சிலரைக் கொலைசெய்த குற்றச்சாட்டு ஜகத் ஜயசூரிய மீதும் காணப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நான் இராணுவ விசாரணைகளைக்கூட முன்னெடுத்தேன். விசாரணைகள் இடம்பெறும்போது. இடைநடுவில் நான் பதவி நீக்கப்பட்டு ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது, ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் மஹிந்தவிடம் தெரிவித்தேன். எனினும் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை.
இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேசத்தில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதால், சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க முடியும். அப்படிச் செய்யும் பட்சத்தில் எமது விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடன் அமையும். முறையான சாட்சிகள் இருக்குமாக இருந்தால் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை - என்றார்.
இராணுவப் பிரதானியாக இருந்த கபில ஹெந்தவிதாரண பின்னர் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகச் செயற்பட்டார். அவர், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் மூளையாகச் செயற்பட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment