சர்வதேச விசாரணையல்ல:சர்வதேச தொழில்நுட்பம்!
செம்மணி புதைகுழி அகழ்வில் சர்வதேச தொழில்நுட்ப ஆதரவின் அவசியத்தை சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது, அத்தகைய உதவியை தாமதமின்றி நாடுமாறு அரசாங்கத்தை கோருவதாக தேசிய கிருஸ்தவமன்ற ஆயர்பேரவை அழைப்புவிடுத்துள்ளது.
இனப்படுகொலைக்குநீதி வேண்டி செம்மணி உடனிருப்பு வேண்டுதல் நினைவேந்தல் நிகழ்வு ஆயர் பேரவையால் இன்று செம்மணி அணையாதீப சுற்று வட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் மறை மாவட்ட ஆயர்கள் அருட்சகோதரர்கள் எனபல கத்தோலிக்க பிரமுகர்கள் நினைவேந்தலில் பங்கெடுத்து முன்னெடுத்திருந்தனர்.
முன்பதாக அணையாதீப தூபிக்குமலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக சிந்துபாத்தி மயானம் சுற்று வட்டம் சென்று அங்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்
வலிந்து காணாமல்ஆக்கப்படுதல் குறித்த துயரம் எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தையும் பாதித்திருக்கிறது.
மற்றைய மனித புதைகுழிகளில் இளையோர் மற்றும் முதியோர் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதும், செம்மணியில் பாடசாலைப் பைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழி விசாரணைமுழுமையாகவும் வெளிப்படையாகவும் நிறைவுக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில், அது தமது காணாமல் போன உறவுகளுக்கான பதில்களை இன்றும் தேடி அலையும் குடும்பங்களுக்கு ஓரளவு நீதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நீதி தாமதிக்கப்பட்டாலும் அது மறுக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கையை எம் மக்களுக்கு தரக்கூடிய ஒளிக்கீற்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லையென பேரவை தெரிவித்துள்ளது.

Post a Comment