கௌதாரிமுனைக்கு காவல்துறை!

 



காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். 

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை  நடைபெற்றது. 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பொலிஸாரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் ஆனாலும் இன்னமும் சில பொலிஸ் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார். மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

பின்னர் ஒவ்வொரு மாவட்டச் செயலர்களாலும் தத்தமது மாவட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தெரிவிக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில், பெண் பொலிஸாரின் பற்றாக்குறை, சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி தொடர்பான பிணக்குகளில் பிரதேச செயலர்களுடன் இணைந்து செயற்பட பொலிஸார் தவறுகின்றமை ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கசிப்பு விற்பனை மிகப் பிரதான பிரச்சினையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலர், அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபடும் குடும்பங்கள் தொடர்பான விவரங்களை திரட்டியுள்ளபோதிலும் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று சட்டவிரோத மணல் அகழ்வு, மரம் மற்றும் கால்நடைகள் கடத்தல் என்பனவும் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டினார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி என்பன இடம்பெறுவதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு பெரும் பிரச்சினையாக உள்ளதாக மாவட்டச் செயலர் குறிப்பிட்டார். கல்லாறை அண்மித்து காட்டை அழித்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார். அங்கு அகழப்படும் மண்ணை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் இடத்துக்கு கொண்டு வரப்படும் பாதையில் பொலிஸ் காவலரண் அமைப்பதன் ஊடாக இதனைத் தடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கௌதாரிமுனை கடற்கரைக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவு இளையோர் வருவதாகவும் அங்கு மதுபானம் அருந்தி விட்டு முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட மாவட்டச் செயலர் பொலிஸ் காவலரண் அங்கு அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வில் ஒரு கிராமமே ஈடுபடுகின்றது என்றும் அங்கு சென்று கைது செய்து வருவதே பொலிஸாருக்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சட்டவிரோத மணல் கடத்தலை தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும், அப்படிச் செய்பவர்கள் பொலிஸாருக்கு கூட பணம் கொடுத்து அதனைச் செய்கின்றமையும் தனது கவனத்து கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தனது தலைமையில் விசேட குழு அமைத்து இதற்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 3 மாதங்களுக்குள் 130 டிப்பர்களை பிடித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

No comments