வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் , அவர்களுக்கு உதவும் பொலிசாரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் பொலிஸார் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினர். 

அதன் போது, தினசரி பொலிஸாரின் உதவியுடனேயே இப்பகுதியில் இருந்து மணல் அகழ்வுகள் இடம்பெறுவதாகவும் , மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களுடன் பொலிஸார் நல்லுறவில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, 

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஒரு சிலர் தொடர்ந்து சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குப் பிரதானமான காரணமாக இருப்பவர்கள் பொலீசார்.

போதை பொருள் கடத்தல்காரர்களிடம், மணல் கடத்தல்காரர்களிடமும் லஞ்சம் வாங்கி விட்டு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கிறார்கள்

பொலிசார் உரிய முறையில் தமது கடமைகளை செய்திருந்தால் இந்த வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்

கடத்தல் சம்பவங்கள் ஊடாக ஒரு சிலர் அதிகளவான சொத்துக்களை சட்டவிரோதமாக குவித்திருக்கிறார்கள் அவர்களுடன் சில பொலிசாரும் அதிகளவான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்

இது தொடர்பாக வடமராட்சி கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுடைய பெயர் விபரங்கள், அவர்களுக்கு உதவி செய்யும் பொலிசாருடைய பெயர் விவரங்கள் யாவும் நாங்கள் எடுத்து, இந்த பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இதனை பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து அவர்களை விசாரணைக்கு அழைக்கும் போது இவர்கள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்

முன்னைய அரசாங்கங்கள் போன்று இந்த அரசாங்கத்திலும் கடத்தல் சம்பவங்களை செய்துவிட்டு அல்லது அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தப்பி விடலாம் என்று நினைப்பது தவறானது

இன்னும் மூன்று வருடங்களுக்குள் அனைவரையும் கைது செய்து சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக ஒழிப்போம். கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் பொலிசாரும் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

No comments