பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்திய நிதியுதவி


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர். 

இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளியும் இணைந்து கொண்டார். 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்தியத் தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள உதவிக்கு நன்றிகளையும் தெரிவித்தார். 

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் முல்லைத்தீவுக்கு மே மாதம் வருகை தந்திருந்தபோது பருத்தித்துறை துறைமுகம் இந்திய நிதியுதவியில் அபிவிருத்தி செய்யப்படும் என்று உறுதியளித்ததை ஆளுநர் இங்கு நினைவுகூர்ந்தார். 

மேலும், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் சுட்டிக்காட்டியதுடன், யாழ். மாவட்டச் செயலராக தான் பதவி வகித்த காலத்தில் குறித்த துறைமுகத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு எடுத்த முயற்சிகள் இறுதியில் கைகூடாமல் போனமையையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். 

இம்முறை அவ்வாறான நிலைமை ஏற்படாது என நம்புவதாகத் தெரிவித்த ஆளுநர் இந்தத் திட்டமுன்னெடுப்புக்கான மாகாணத்தின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

பருத்தித்துறை துறைமுகத்தை இந்தக் குழுவினர் நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடற்றொழில் அமைச்சரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, பருத்தித்துறை துறைமுகத்துடன் தொடர்புடைய சமூக அமைப்புக்களின் கருத்துக்களை உள்வாங்கி எதிர்கால திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார். 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், இந்தியத் தூதுக் குழுவினர், கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  


No comments