புத்திசாலிக் காகம் நரியை ஏமாற்றியதை ஒத்திகை என்றால்...! பனங்காட்டான்


வடை கேட்ட நரியிடம் காகம் ஒன்று ஏமாந்தது பழைய கதை. நவீன காலக் காகம் வடையைக் காலுக்குள் வைத்துக் கொண்டு நரியை ஏமாற்றியது புதுக்கதை. ரணிலின் கைதையும் விளக்கமறியலையும் நவீன காலக் காகத்துடன் பொருத்திப் பார்க்கலாம். முதல் ஒத்திகையின் வெற்றி இதனை தொடர்கதையாக்குமா?

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அறுபதாவது கூட்டத்தொடர் அடுத்த ஒரு வாரத்தில் - செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி அக்டோபர் 8 வரை இடம்பெறவுள்ளது. முன்னர்போல இம்முறையும் இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்படவுள்ளது. 

மனித உரிமைகள் பேரவை என்பது விசாரணை செய்து உண்மையை அறிந்து நீதி வழங்கும் மன்றல்ல எனினும், விடயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வழிகாட்டும் என்ற நம்பிக்கையே இத்தீர்மானங்களில் கவனம் செலுத்த வைக்கிறது. 

இலங்கைத் தமிழரைப் பொறுத்தளவில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, நம்பிக்கையீனங்கள் மத்தியிலும் நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் தீர்மானங்கள் பார்க்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழரின் சிவில் அமைப்புகளும் தொடர்ந்து கடிதங்களையும் சமர்ப்பணங்களையும் அனுப்பி வருகின்றன. 

ஜெனிவா விடயத்தில்கூட தாங்கள் ஒன்றுபட மாட்டோம் என்பதை சிங்கள அரசுக்கு மட்டுமன்றி சர்வதேசத்துக்கும் ஜெனிவா ஊடாக தமிழ் தலைவர்கள் தொடர்ந்து காட்டி வருகின்றனர். இதன் அடையாளமே இவர்கள் தனித்தனியாக அனுப்பும் கடிதங்கள். பேரவையின் ஆணையாளர் சில வாரங்களுக்கு முன்னர் இங்கு வருகை தந்து பலரையும் சந்தித்து, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்குச் சென்றிருந்த போது இதனை அறிந்திருப்பார். 

செப்டம்பர் 8ல் ஆரம்பமாகும் அமர்வில் புதிய வரைபு தீர்மானமாக வைக்கப்படும். வழமைபோன்று இலங்கை அரசு அனைத்தையும் மறுதலிக்கும். இலங்கையில் ஆட்சி மாறினாலும் சிங்கள ஆட்சியே தொடருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், படையினரைப் பாதுகாப்பதிலும் சர்வதேச பொறிமுறை விசாரணையை நிராகரிப்பதிலும் அவர்கள் அசையாது செயற்படுகிறார்கள். 

ஜெனிவா என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் திறக்கப்பட்ட கதவு. சிங்கள தேசத்தைப் பொறுத்தளவில் இதனை முதன்முதலாக தள்ளித் திறந்தவர் மகிந்த ராஜபக்ச. பிரேமதாசவின் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி. இளைஞர்களும் ஆதரவாளர்களும் படுகொலை செய்யப்பட்டதை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லும் நீதி விசாரணைக்காக 1990 - 1991களில் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கு எடுத்துச் சென்றவர் இவரே. அந்த நாட்களை மகிந்த - ஜே.வி.வி.யின் தேநிலவுக் காலமென அரசியல் அரங்கில் அழைப்பர். 

அன்று தனது நடவடிக்கைகளை தேசப்பற்று என்று கூறிய இவரே, 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஜெனிவா நோக்கிச் சென்றவர்களைப் பார்த்து தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டியவர். அத்துடன் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வன்மையாக எதிர்த்தவரும் இவரே. 2004 - 2008 காலப்பகுதியில் மனித உரிமைகள் பேரவை ஆணையாளராகவிருந்த கனடிய நீதியரசரான லூயிஸ் ஆர்பரை வெள்ளைத்தோல் புலி எனவும், 2008 - 2014 காலத்தில் ஆணையாளராகவிருந்த நவநீதம்பிள்ளையை தமிழ்ப்புலி என்றும் நாமம் சூட்டியவர்கள் மகிந்தவும் அவரது அணியினருமே. 

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான மிச்சேல் பச்சலற் அம்மையார்  2018ல் மனித உரிமைகள் ஆணையாளராக நியமனமானதையடுத்து வெளியிட்ட முக்கிய அறிக்கைகள் இலங்கை மீதான கடுமையான நடைமுறைகளை மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு வழிவகுத்ததாயினும் இறுதியில் எதனையுமே நிலைநாட்ட முடியாது போய்விட்டது. 

இப்போது அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்படும் காணாமற்போனோரின் எலும்புக்கூடுகளும் எச்சங்களும் இனப்படுகொலையின் மறக்க முடியாத சாட்சிகளாகவுள்ளன. இதனை தற்போதைய அநுர குமர அரசும் நன்கறியும். இந்த விடயம் ஜெனிவாவில் முக்கியமானதாக பிரஸ்தாபிக்கப்படும் என்பதும் இவர்கள் அறிவர். 

இதன் காரணமாகவே சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி அகழ்வை மறுக்காமலும் மறைக்காமலும் சட்டரீதியாக பூரண ஆதரவு வழங்குவதாக வெளியுலகுக்கு காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெனிவாவின் அறுபதாவது அமர்வு முடிவடைந்த பின்னரே அநுர குமர அரசு இவ்விடயத்தில் என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவரும். 

புதைகுழிகளை ஆழமாக்க ஸ்கானர் வழங்குவதும், நீதிமன்றம் ஊடாக தேவையான பாதுகாப்பை வழங்குவதும், அமைச்சர்கள் நேரடியாகச் சென்று புதைகுழியை பார்வையிடுவதும், செப்டம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது இவ்விடத்தைச் சென்று பார்வையிடக்கூடும் என்று அறிவிப்பதும் நீதி வழங்கப்படுகிறது என்பதன் அர்த்தமாகாது. அவ்வாறு எடுத்துக் கொள்ளவும் முடியாது. அப்பாவி மனிதர்களின் எச்சங்களை அடையாளம் காணவும், கொலைஞர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச உதவி அவசியம். இதனையே இப்போது பாதிக்கப்பட்ட சமூகம் கேட்கிறது. 

சர்வதேச நீதிப் பொறிமுறையிலிருந்து தப்புவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக இருந்த ஒருவரையே அவர் இழைத்த குற்றத்துக்காக உள்நாட்டு  நீதிப்பொறிமுறை வழியாக அவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்தது என்றால், தமிழினப் படுகொலைக்கும் இதே உள்நாட்டுப் பொறிமுறையில் நீதி வழங்க முடியாது என்று எதற்காக சந்தேகப்பட வேண்டுமென்ற கருத்தை இதனூடாக அரசாங்கம் மெதுவாக பரவ விட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாதுள்ளது. 

ரணிலின் மீதான குற்றப்பத்திரிகை இதுவரை முழுமையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை. இவர் மீதான குற்ற விசாரணை எப்போது ஆரம்பமாகி எப்போது முடிவடைந்து, எவ்வகையான தண்டனை வழங்கப்படுமென்பதும் எவருக்கும் தெரியாது. சில சமயம் இவர் குற்றமற்றவர் எனக்கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படலாம். 

ஓரிரவு கூட சிறைச்சாலையில் தங்கியிருக்காது, மருத்துவமனை படுக்கையில் அதிமிகு பராமரிப்பில், வீட்டிலிருந்து வந்த உணவை உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட இவர், நான்காம் நாள் பிணை கிடைத்ததும் எழுந்து வீடு சென்றுள்ளார். வழக்கமாக அரசியல்வாதிகளுக்கு விளக்கமறியலில் வைக்கப்படும்போது வரும் நோய்களும் மருத்துவ உதவிகளும் இவருக்கும் வந்தன. 

கைது செய்யப்படும்வரை அரசியலில் தீவிரமாக இயங்கி வந்ததோடு ஜே.வி.பி. அரசை விமர்சித்து வந்த இவருக்கு விளக்கமறியல் தீர்ப்பு வந்ததும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய அடைப்பு என்ற பட்டியலை மருத்துவர்களும் வழக்கறிஞர்களும் வெளியிட்டனர். இவ்வாறான பயங்கர நோய்களுடைய ரணிலால் இனி அரசியலில் செயற்பட முடியாதென நையாண்டி செய்ய வைத்துள்ளது இந்த மருத்துவ அறிக்கை. 

அநுர குமர அரசாங்கத்தை ''எல் போட்|''என கேலி பண்ணியவருக்கு அந்த எல் போட் தனது பலத்தைக் காட்டியுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதியென வர்ணிக்கப்படும் ரணிலுக்கு உள்நாட்டில் செல்வாக்கு இல்லையென்பதை கடந்த கால தேர்தல்கள் மட்டுமன்றி அவரது விளக்கமறியல் காலமும் எடுத்துக் காட்டியுள்ளது. இதுவரை அவரது கைதைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, அரசுக்கெதிரான போராட்டமோ இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் பல தலைகளை கைது செய்வதற்கான ஒத்திகை அநுர குமர அரசுக்கு ஒரு நம்பிக்கையளித்துள்ளதென அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர். 

கோதபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச குடும்பத்தில் இருவர் அல்லது மூவர், சஜித் பிரேமதாசவும் மனைவியும் கைது வலையில் இருப்பவர்களென ஊடகங்கள் எழுத ஆரம்பித்துவிட்டன. ரணில் விக்கிரமசிங்கவின் கைதையும் விளக்கமறியலையும் ஒரு சமூக ஊடகமே முற்கூட்டி அறிவித்தது என்பதைப் பார்க்கும்போது, இதுபோன்ற ஊடக அறிவிப்புகளை தவிர்க்க முடியாதுள்ளது. இதனை எவராலும் மறுக்கவும் முடியாதுள்ளது. 

வடை கேட்ட நரியிடம் காகம் ஒன்று ஏமாந்தது பழைய கதை. நவீன காலக் காகம் வடையைக் காலுக்குள் வைத்துக் கொண்டு நரியை ஏமாற்றியது புதுக்கதை. ரணிலின் கைதையும் விளக்கமறியலையும் நவீன காகத்துடன் பொருத்திப் பார்க்கலாம். முதல் ஒத்திகையின் வெற்றி இதனை தொடர்கதையாக்குமா?


No comments