நெல்லியடியில் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் திருட்டு - 10 பேர் கைது
வெளிநாடொன்றில் இருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை திருடியமை , உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடி பகுதியில் பகுதியில் நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணய தாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதனை அறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு வந்து செல்லும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் , தாம் பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக திருடி வந்ததாகவும் , அவற்றினை நண்பர்கள் , தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் நிலையத்தில் பணத்தினை மாற்றியதாகவும் கூறியுள்ளனர்
அதன் அடிப்படையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை , திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை மீட்டுள்ளதாகவும் , ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment