சித்திரவதைகளை விஸ்கி அடித்துக்கொண்டு பார்த்து ரசித்தவரே ரணில்
இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதை செய்யப்படுவதனை விஸ்கி குடித்துக்கொண்டு பார்த்து ரசித்த நபர் தான் ரணில் விக்கிரமசிங்க என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமைச்சர் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் ஆகியோருடன் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்தி இருந்தார்.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க சிறு குற்றம் செய்ததாகவும் ,அதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பலர் இன்று கூறி வருகின்றனர்.
அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க முன்னர் செய்த குற்றங்கள் அட்டூழியங்கள் எதுவும் தெரியவில்லை போல.
ஆசியாவின் பெரும் நூலகமான , யாழ் , பொது நூலகம் எரிக்கப்பட்டது, இனங்களுக்கு இடையில் கலவரங்களை ஏற்படுத்தி , தமிழ் மக்களை கொன்றொழித்து , 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது, பட்டலாந்த சித்திரவதை முகாம்களில் இளைஞர்களை கடுமையாக சித்திரவதை புரிந்து அவர்கள் படுகொலை செய்யப்படுவதனை விஸ்கி குடித்துக்கொண்டு பார்த்து ரசித்தமை , ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகளை கொழும்பு 04ஆம் மாடியில் சித்திரவதை புரிந்து படுகொலை செய்ய உறுதுணையாக இருந்தமை , உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர் எப்போதோ கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டியவர்.
இப்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும். அத்துடன் ஏனைய குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்காவை , உடல்நல குறையால் , சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அது கூட இராஜ தந்திரிகளின் அழுத்தம் காரணமாக நடந்ததாக சிலர் கூறுகின்றனர். எனக்கு தெரிந்து அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. வெளிநாட்டு தலைவர்கள் , இராஜதந்திரிகள் எமது அரசாங்கத்திற்கு எந்த அழுத்தமும் தரவில்லை. தரவும் மாட்டார்கள் என நம்புகிறேன்.
அதுபோன்று, தற்போது ரணிலை கைது செய்தவர்களால் ராஜபக்சேகளை கைது செய்ய முடியுமா ? என கேட்கின்றனர்.
இவ்வாறு தான் ரணிலை கைது செய்ய முடியுமா ? அவர் நரி மூளை உடையவர் , சட்ட புலமை கொண்டவர் , பல இராஜதந்திரிகளுடன் நெருக்கமாக பழகுபவர், அவருக்கு சர்வதேச நண்பர்கள் உள்ளனர், அவரை எல்லாம் நெருங்கவே முடியாது என்றனர். ஆனால் இன்று என்ன நடந்துள்ளது.
சட்டத்தால் தம்மை எதுவும் செய்ய முடியாது என யாரும் நினைக்க வேண்டாம். அதனை நாம் மாற்றியமைத்துள்ளோம். சட்டம் தன் கடமையை செய்யும்.. அதனை பார்த்து யாரும் "ஹையோ .. முறையோ .." என கத்த வேண்டாம்.
நாட்டினை கொள்ளையடித்தவர்கள் , மக்களின் பணத்தினை சூறையாடியவர்கள் என அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்துவோம்
ரணில் விக்கிரமசிங்கவின் கைதை தொடர்ந்து , ஒட்டுமொத்த திருட்டு கும்பல்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். மோசடி செய்த அனைவர்க்கும் எதிரான விசாரணைகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment