நெடுந்தீவு:இனி ஈபிடிபியிடமில்லை!
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேச சபையினை 30வருடங்களின் பின்னரான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சி மீட்டெடுத்துள்ளது. தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் நெடுந்தீவு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவாகியுள்ளார்;.
நெடுந்தீவு பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி சார்பில் 06 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக 04 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 02 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் 01 உறுப்பினரும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இன்றைய தவிசாளர் தெரிவின் போது தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பங்கெடுத்திருந்தனர்.
இதனிடையே தமிழரசுக்கட்சி 58 சபைகளில் போட்டியிட்டாலும், 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம்.
மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46 இல் எமது இலக்கை அடைந்துள்ளோம். மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment