பிரதமருடனான சந்திப்பில் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்துவேன் - கஜேந்திரகுமார்
பிரதமருக்கும், வட-கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு, வடக்கிலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு உறுதியாக வலியுறுத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமைகோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதனையடுத்து அரசாங்கம் அவ்வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெள்ளிக்கிழமை (23) மு.ப 11.00 - பி.ப 1.00 மணி வரை பாராளுமன்றத்தில் தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் பங்கேற்குமாறு பிரதமர் ஹரினி அமரசூரிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அதன்படி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் இச்சந்திப்பில் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசாங்கம் எத்தகைய காரணங்களை முன்வைத்தாலும், இவ்வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்தோடு அரசாங்கத்துக்கு உண்மையிலேயே வட, கிழக்கிலுள்ள காணிகளை அபகரிக்கும் நோக்கம் இல்லை எனில், அவர்கள் மக்கள் முகங்கொடுத்துவரும் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கே விரும்புகிறார்கள் எனின், அதற்கென விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என இச்சந்திப்பின்போது தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
Post a Comment