பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரை தாக்கியது இந்தியா
இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை தொடங்கி , பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் ஒன்பது இடங்களைத் தாக்கியது.
இதேநேரம் இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இன்று புதன்கிழமை அதிகாலை 1.14 மணியளவில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்துத் வான்வழியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. அவை பயங்கரவாத முகாங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்தது.
இதேநேரம் ஐந்து இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது. குறிப்பாக கஷ்மீரில் பாக், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய மூன்று இடங்களிலும், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கே அருகே இரண்டு இடங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
ஆறு இடங்களில் இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் முதன்மையாக செயல்படும் இஸ்லாமிய அமைப்பான ஜெய்ஷ் இ-முகமதுவின் கோட்டைகளையும், இந்திய நிர்வாக காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ தொய்பாவை இலக்கு வைத்து இந்தியா தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய தாக்குதலை ஒரு போர் நடவடிக்கை என்று விவரித்தார். பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுக்க முழு உரிமையும் உள்ளது என்று அவர் எக்ஸ் தளத்தில் உருது மொழியில் எழுதினார். பாகிஸ்தான் தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பதை நன்கு அறிந்திருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.
நிலைமை மேலும் மோசமடைவதை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்காவிற்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலீஹா லோதி கூறினார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடந்தகால நெருக்கடிகள் எப்போதும் அமெரிக்காவால் தணிக்கப்பட்டு வருவதால், அதைத் தடுக்க வாஷிங்டன் தலையிடக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டை மிக விரைவாக முடிவடையும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்னும் அதிக பலத்துடன் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஜியோ தொலைக்காட்சியடம் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று, மலை பஹல்காமுக்கு அருகிலுள்ள ஒரு ரிசார்ட்டுக்கு அருகில், துப்பாக்கிதாரிகள் 26 பேரைக் கொன்றனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன.
Post a Comment