காங்கிரஸ்: அங்கும் இல்லை! இங்கும் இல்லை!!

வடகிழக்கில் தமிழரசுக்கட்சி ஆட்சியை அனைத்து சபைகளிலும் கைப்பற்ற முற்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது. 

அதேபோன்று உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டாவது நிலையில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு பிரதி முதல்வர், மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் ஆதரவு வழங்கும் எனவும் அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியப் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தமிழ்த் தேசியப் பேரவைத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரிலும் அதன் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மேலதிக ஆசனங்கள் மூலம் கட்சியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடி கொள்கை அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வெளிப்பாடு, சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை அமைப்பதில் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பேரவை தீர்மானத்தை எடுத்துள்ளது.

எந்தவொரு நிலையிலும் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கும் அவற்றுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் இவ்வாறான பதவிகளுக்கான தெரிவுகளுக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது.அவற்றின் மூலம் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளின் கைகளில் வைத்திருப்பதுடன் எதிர்காலத்தில் எவ்வித இடையூறுகளுமில்லாது மக்களுக்கான பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று பேரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.


No comments