யாழில் யுவதி கடத்தல்


யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பிய இளம் தம்பதியினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் , யுவதியின் கணவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் , தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த யுவதியும் , பூநகரி பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். 

அந்நிலையில் யுவதியின் பெற்றோர் , தமது பிள்ளையை காணவில்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, குறித்த யுவதி திருமணம் செய்து வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து குறித்த பெண்ணையும் , அவரது கணவரையும் பொலிஸ் நிலையம் அழைத்து பெற்றோரின் முறைப்பாட்டை முடிவுறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அதற்கு யுவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால் , மல்லாகம் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர் 

குறித்த வழக்குக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு நேற்றைய தினம் யுவதியும் அவரது கணவரும் வழக்கு விசாரணைக்காக சமூகம் அளித்த பின்னர் , இருவரும் நீதிமன்றை விட்டு வெளியே வந்த நிலையில் , நீதிமன்றுக்கு அருகில் பட்டா ரக வாகனத்தில் காத்திருந்த யுவதியின் சகோதரன் அடங்கிய கும்பல் , யுவதியின் கணவன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு , யுவதி மீதும் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் , யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட யுவதியை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments