வழக்குகளை கிடப்பில் போடுவது சாதாரணம்!

 


தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது திருட்டு மௌனம் காத்திருந்த ஆட்சியாளர்கள் தற்போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ள போதும் அதே மௌனத்தை பேணப்போகின்றார்களாவென்ற கேள்வி எழுகின்றதென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கடந்த நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் வடகிழக்கில் கொழும்பில் என 39 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளனர்.அவர்கள் தொடர்பிலான அனைத்து வழக்குகளும் முன்னைய காலங்களில் சட்டமா அதிபர்களது ஆலோசனைகளின் பிரகாரம் அவ்வவ் மாவட்ட நீதிமன்றங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் முதல் மயில்வாகனம் நிமலராஜன் வரையாக கொலைகளை அரங்கேற்றிய கொலைகாரர்கள் சர்வசாதாரணமாக நாட்டை விட்டு வெளியேறவும் திரும்பிவரவும் ஏற்றதொரு சட்ட ஆட்சியே இந்நாள் வரை பேணப்பட்டுவருகின்றது.

சட்டத்தின் முன்னதாக கொலைகாரர்கள் தண்டிக்கடாத சூழல் வடகிழக்கில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பின்னராக பரவியிருந்தது.

இந்நிலையில் தற்பேர்து ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்தமை மாற்றியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, காவல்துறை பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை முற்றாக வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இத்தகைய அறிக்கையினை விடுத்த சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள காரணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் காணாமல் ஆக்கப்பட்டபோதும் புதிய புதிய விளக்கங்களை அதே தரப்புக்கள் முன்வைத்திருந்தன.

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் மீண்டும் வலியுறுத்துகின்றது.

இன மத வேறுபாடுகளிற்கு அப்பால் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை வலியுறுத்த அனைவருடனும் கைகோர்க்கும் யாழ்.ஊடக அமையம் மீண்டுமொரு முறை சகோதர ஊடக கட்டமைப்புக்களுடன் போராடும் தனது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்தியும் கொள்கின்றதென தெரிவித்துள்ளது.


No comments