காரை. சமூக மேம்பாட்டு கழகம் தமிழ் மக்கள் கூட்டணிக்கு ஆதரவு
சமூக மேம்பாட்டு கழகத்தின் அரசியல் பிரிவினர் தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணன் கோவிந்தராஜன் மற்றும் முன்னாள் உபதவிசாளர் ஜெயகிருஸ்ணா ஆகியோர் தமது கழகத்தின் ஆதரவை தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான குழுவினருக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முன்னாள் தவிசாளர் கோவிந்தராஜன் தெரிவிக்கையில்,
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது , காரைநகர் பிரதேச சபையின் 06 வட்டாரங்களிலும் சுயேட்சை குழுவாக மீன் சின்னத்தில் போட்டியிட்டு, 03 வட்டாரங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து காரைநகர் பிரதேச சபையை திறம்பட நடாத்தி சென்று இருந்தோம்.
நாங்கள் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியினருக்கு எமது ஆதரவை வழங்குவோம் என சிந்தித்த போது , அனைத்து மக்களுக்கும் மதிப்பளித்து , அரவணைத்து செல்லும் தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு ஆதரவை வழங்குவோம் என முடிவெடுத்தோம். இதனை எமது கழகம் சார்ந்தவர்களும், பிரதேச மக்களும் ஏற்றுக்கொண்டனர்.
அதேவேளை தமிழ் மக்கள் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ் . மாநகர சபையின் முதல்வராக இருந்த இரண்டு ஆண்டுகளும் அதனை திறம்பட நடாத்தி பல அபிவிருத்தியையும் முன்னெடுத்திருந்தார். அந்த வகையில் அவரையும் அவர் சார்ந்தவர்களுக்கும் ஆதரவு அளிக்கின்றோம் என தெரிவித்தார்.
Post a Comment