சுமந்திரன் அணியின் ஆதரவு சஜித்தின் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது! பனங்காட்டான்
தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. சிறுதொகையினரான சுமந்திரன் அணியினர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரபல அரசியல் கட்டுரையாளர் ஜெகான் பெரேரா கடந்த வாரம் எழுதிய கட்டுரையொன்றில், 'சிறுபான்மைக் கட்சிகளிடமிருந்து சஜித் பெற்றுள்ள அங்கீகாரம் அவரது தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. இதே கட்சிகளின் ஆதரவை 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் சஜித் பெற்றிருந்தார். ஆனால், கோதபாயவால் இவர் தோற்கடிக்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாத ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்று அதற்கான முன்னெடுப்புகள் இந்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த மே மாத நடுப்பகுதியில் இது தொடர்பான கருத்தினை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவராகவிருந்த (அமரர்) இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இதனை ஓர் அறிக்கை வடிவில் தமிழரசு எம்.பி. சுமந்திரன் வெளியிட்டார். இரா.சம்பந்தன் இவரிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறிய கருத்துகள் இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்ற முக்கியமான வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது:
'உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்குக்கு சம~;டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வுக்கே இலங்கை அரசு இணங்கி வந்துள்ளது. அதற்குக் குறைந்த எதற்கும் இணங்கும் ஏற்பாடுகளுக்கு நாம் போக முடியாது. இதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான எந்த முடிவையும் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஊடாக தமிழரசுக் கட்சியினர் இணங்கக்கூடாது" என்பது இந்த முக்கியமான வாசகம்.
இதனூடாக முக்கியமான விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு இணைந்த சம~;டி முறையிலான அதிகாரப் பகிர்வு விடயத்தில் சம்பந்தன் இறுக்கமாக இருந்துள்ளார் என்பதை இந்த அறிக்கையினூடாக சுமந்திரன் நன்கு தெரிந்திருந்தார். அதனாற்தான், ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி ஒரு முடிவை எடுக்குமென்று பல தடவை பொதுவெளியில் சொல்லியும் வந்தார்.
தமது கூற்றை நம்ப வைக்கும் போக்கில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் வாரமே இது தொடர்பாக தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும் என்றும், தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே முடிவெடுப்பது கட்சியின் கடந்த கால வழக்கமென்றும் இவர் சொல்லி வந்தார்.
ஆனால், இந்த மாதம் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதெனவும், தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் போட்டியிலிருந்து விலக வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் யாப்பு விதிகளின்படி இக்கூட்ட அறிவிப்புக்கு போதிய அவகாசம் இருக்கவில்லையெனவும், முக்கிய உறுப்பினர்களுக்கு அழைப்பு கிடைக்கவில்லையெனவும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குபற்றவில்லையெனவும், கிளிநொச்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன் வெளிநாடு செல்லும் முன்னர் கூட்டத்தை பின்போடுமாறு விடுத்திருந்த வேண்டுகோள் ஏற்கப்படவில்லையெனவும் பல குற்றச்சாட்டுகள் முக்கிய உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பது பற்றி நிகழ்ச்சி நிரலில் இருக்கவில்லையெனவும் சொல்லப்படுகிறது.
ஆக, கூட்டம் நடைபெற்ற விதத்தைப் பார்க்கையில் இரண்டு விடயங்கள் அப்பட்டமாகத் தெரிகிறது. தமக்குச் சார்பானவர்கள் பங்குபற்றிய இக்கூட்டத்தைப் பயன்படுத்தி, தாம் ஏற்கனவே உறுதியளித்திருந்த சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை இக்கூட்டத்தில் எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டுமென்பதில் சுமந்திரன் வேகமாக செயற்பட்டுள்ளார் என்பது முதலாவது. அடுத்தது, தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவருவதற்கு முன்னர் சஜித்தை ஆதரிக்கும் முடிவை நிறைவேற்ற வேண்டுமென்பது.
பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இரா. சம்பந்தன் முன்னர் தெரிவித்திருந்த வடக்கு-கிழக்கு இணைந்த, சம~;டி அடிப்படையிலான உள்ளக சுயநிர்ணய உரிமை குறிப்பிடப்படவிருப்பதால் அதற்கு முன்னர் சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுப்பதில் சுமந்திரன் சாதுரியமாகச் செயற்பட்டார். மூத்த பெருந்தலைவர் சம்பந்தன் மரணமாகி மூன்று மாதங்கள் முடிவதற்கிடையிலேயே அவரது கோரிக்கையை நிராகரித்துவிட வேண்டுமென்பதில் சுமந்திரன் எவ்வளவு அக்கறையாக இருந்துள்ளார் என்பதையும் இதனூடாக காண முடிகிறது.
தமிழரசின் மத்திய செயற்குழுவின் முடிவை(?) பல்வேறு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இருட்டடிப்பு செய்துள்ளன. வேறு சில ஊடகங்கள் செயற்குழுவின் முடிவை சுமந்திரன் அணியின் முடிவு என்று விமர்சித்து வருகின்றன. இதனால், போதியளவுக்கு தமிழர் வாக்குகளை தமிழரசுக் கட்சியால் பெற்றுக் கொள்ள முடியாதென்ற கருத்தும் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது.
2010ல் தேசியப் பட்டியலூடாக தமிழரசுக் கட்சிக்குள் நுழைக்கப்பட்ட சுமந்திரன் 2015 பொதுத்தேர்தலில் 58,043 வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால், 2020ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் ஏறத்தாழ அதன் அரைவாசியான 27,836 வாக்குகளை மட்டுமே பெற முடிந்திருந்தது. இதுகூட சக எம்.பியான சிவஞானம் சிறீதரனின் ஆதரவினால் பெறப்பட்டது.
இவ்வாறாக, மக்கள் ஆதரவில் தேக்கநிலையிலுள்ள சுமந்திரனின் வேண்டுகோளை ஏற்று தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வி தெற்கில் வேகம் கொண்டுள்ளது. தாயக பூமியிலும் கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டக் கிளைகள் பொதுவேட்பாளரை ஆதரித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் பொதுவேட்பாளருக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பொதுவேட்பாளர் செல்லுமிடமெங்கும் திரண்டெழும் மக்களால் பெருவரவேற்பளிக்கப்படுகிறது. கொழும்பின் பிரதான ஊடகங்கள் உண்மை நிலையை விபரித்து வருகின்றன.
பிரபல்யமான அரசியல் கட்டுரையாளர் ஜகான் பெரேரா இது தொடர்பாக கடந்த வாரம் தி ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றின் முக்கிய பகுதியின் தமிழாக்கம் பின்வருமாறு:
'எதிர்க்கட்சித் தலைவரை (சஜித் பிரேமதாச) ஆதரிப்பதன் மூலம் ஏற்கனவே அவ்வாறு செய்துள்ள முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் சிறுபான்மையினரின் பிரதான கட்சிகளுடன் தமிழரசுக் கட்சியும் இணைகிறது. கட்சி உயர்மட்டங்களின் அங்கீகாரம் மக்களின் வாக்குகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. எதிர்கட்சித் தலைவரை ஆதரித்த முஸ்லிம் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகள் இரண்டும் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இழந்துள்ளது. அவர்கள் தங்கள் கட்சித் தலைமையை மீறி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து சிறுபான்மையினருக்கு பலமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தளவில் அதன் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கட்சியின் தீர்மானத்தின் ஒருபகுதியாக இருக்கவில்லை. இவர்கள் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு தங்கள் ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இன, மத சிறுபான்மை கட்சிகளிடமிருந்து சஜித் பிரேமதாச பெற்றுள்ள அங்கீகாரம் தேர்தல் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்காது. 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் இதே கட்சிகளின் ஆதரவை இவர் பெற்றிருந்தார். ஆனால், தேர்தலில் கோதபாயவினால் இவர் தோற்கடிக்கப்பட்டார்"
சுமந்திரன் அணி உட்பட எதிர்க்கட்சிகள் பலவற்றின் ஆதரவை சஜித் பிரேமதாச பெற்று வந்தாலும் அவரது வாக்கு வங்கியை இது உயர்த்தாது என்ற நிதர்சனத்தை ஜெகான் பெரேரா அச்சொட்டாக பதிவு செய்துள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தாங்கள் முடிவு எடுத்ததைத் தொடர்ந்து வடக்கு-கிழக்கின் அரசியல் போக்கு கணிசமாக மாறியுள்ளதாகவும், சஜித்தை ஆதரிக்கும் தங்கள் தீர்மானத்தினால் அவருக்கு தமிழரின் பெரும்பாலான வாக்குகள் செல்லுமெனவும் சுமந்திரன் கண்களை மூடிக்கொண்டு அண்டப் புளுகொன்றை அவிட்டு விட்டிருந்தார். (இதுவரை சுமந்திரன் அணி சஜித்துக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டத்தைக்கூட நடத்தவில்லையென்பதே கள நிலைவரம்)
இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவளித்தாலும் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக முடியாதென்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மக்களின் அடையாளமாகவும், அவர்களின் அரசியல் பலத்தை சர்வதேசத்துக்கு காட்டவுமே பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதாக அரியநேத்திரனே பல தடவை கூறியுள்ளார். இதனை சிங்கள ஆங்கில ஊடகங்களும் கணிசமான அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், தொலைக்காட்சிச் செவ்வியில் சுமந்திரன், தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லாததால் அவர் போட்டியிடுவதால் தமிழ்ச் சமூகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று கருத்துரைத்து தம்மைத் தாமே முட்டாளாக்கியுள்ளார்.
மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்களுக்கே தமிழ்ப் பொதுவேட்பாளரின் முக்கியத்துவம் தெரிகிறது என்பதற்கு உதாரணமாக சஜித் பிரேமதாசாவின் தேசிய மக்கள் கட்சியினது முக்கிய பிரமுகரான உமாசந்திரா பிரகா~; பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து அவரது வார்த்தைகளில் அவ்வாறே கீழே தரப்படுகிறது:
'பொதுவேட்பாளர் என்பது தமிழ் இனத்தின் ஓர் அடையாளம். எனவே, அந்தப் பொதுவேட்பாளரைத் தெரிவு செய்யும் உங்கள் உரிமைக்கு நாங்கள் மதிப்பளிப்பதுடன் அதனை கௌரவப்படுத்துகிறோம். அது மாத்திரமன்றி, பொதுவேட்பாளர் விடயமானது சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் இருப்பைக் காட்டுவதற்கான முயற்சி" என்று தெரிவித்துள்ள இவரது கருத்து சஜித் அணியினர் எவ்வாறு பொதுவேட்பாளரை பார்க்கின்றனர் என்பதை பளிச்சிட்டு காட்டுகிறது.
ஆனால், தமிழ் தேசியம் பேசியவாறு தமிழரசுக் கட்சியை சின்னாபின்னமாக்கும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கும் சுமந்திரன், வடக்கில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்கு சுபநேரம் பார்த்திருக்கும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கும் அப்பால், பொதுவேட்பாளர் அரியநேத்திரனை தோற்கடித்தே தீருவோமென சூளுரைத்து வருகிறார்.
தமிழரை அழிப்பதற்கு வேற்று இனத்தவர் எவரும் தேவையில்லை. அதற்கான ஒருவர் தமிழர் வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்.
Post a Comment