அரியத்துக்கு வாக்குகள் சேர்ந்ததும்சஜித்துக்கு வாக்குகள் குறைந்ததும் யாரால், எவ்வாறு நிகழ்ந்தது? பனங்காட்டான்


2020 பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சியின் பத்து எம்.பிக்கள் பெற்ற மொத்த வாக்கு 327,168. ஆனால், நாற்பது நாட்கள் மட்டுமே பரப்புரை செய்த பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு மக்கள் வழங்கிய வாக்குகள் 226,342. ஒப்பீட்டளவில் பார்க்கின் அரியநேத்திரனுக்கே வெற்றி. 

2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வடக்கு கிழக்கில் கிடைத்த வாக்குகள் சுமார் 11 லட்சம். சுமந்திரன் விடுத்த வேண்டுகோளினால் இம்முறை வடக்கு கிழக்கில் கிடைத்த வாக்குகள் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் மட்டுமே. ஏறத்தாழ சஜித்துக்கு ஐம்பது வீதத்தை குறைத்துவிட்ட சாதனையாளர் யார்?

இலங்கையில் ஏழரை தசாப்தத்துக்கு மேலாக நீயா நானா என்று போட்டி நடத்தி, மாறி மாறி ஆட்சி புரிந்து இனங்களுக்கிடையில் பிளவையும் முறுகலையும் வளர்த்து வந்த சிங்கள தேசிய கட்சிகளுக்கு மக்கள் கட்டாய ஓய்வு கொடுத்துள்ளனர். 

சிங்கள தேசத்தின் ஆரம்ப கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சிறீலங்கா சுதந்திர கட்சியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டன. இவற்றிலிருந்து உருவான மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், சஜித் தலைமையில் பிறப்பெடுத்த தேசிய மக்கள் சக்தியும் கடந்த மாத தேர்தலில் நல்ல பாடம் கற்றுள்ளனர். 

இப்போது, சிங்களத் தேசத்தின் பிரகாச நட்சத்திரமாக, முதலாவது மார்க்சிஸ ஜனாதிபதியாக அநுர குமார திசநாயக்க பதவிக்கு வந்துள்ளார். இவரது வெற்றிக்கான அடித்தளத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இட்டவர் ரோகண விஜேவீர என்பதை மறந்துவிடக்கூடாது. 1982ம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்றபோது ரோகண விஜேவீர மூன்றாம் இடத்துக்கு வந்தவர் என்பது தெரிந்துகொள்ள வேண்டியது. 

ஒரேயொரு எம்.பியாக தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் புகுந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறகலய போராட்டம் கொடுத்த பரிசாக ஜனாதிபதி பதவி கிடைத்தது. அதே அறகலயவின் முகமாக தமது மூன்று எம்.பிக்களுடன் மக்கள் தெரிவில் அநுர குமார ஜனாதிபதியாகியுள்ளார். 

நாட்டின் அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் வெற்றி பெற்ற எட்டு ஜனாதிபதிகளும் முதல் சுற்றிலேயே ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கதிரை ஏறினர். ஆனால், ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அநுர குமார விருப்பு வாக்குகளைச் சேர்த்தே ஐம்பது வீதத்தை தாண்டினார்.

கடந்த மாதம்வரை ஜனாதிபதியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது அவருக்குக் கிடைத்த மூன்றாவது தோல்வியும்கூட. 1999ல் சந்திரிகா குமாரதுங்கவிடமும், 2005ல் மகிந்த ராஜபக்சவிடமும் தோல்விகளைச் சுவைத்த இவர், கடந்த மாதம் அநுர குமாரவிடமும் சஜித் பிரேமதாசவிடமும் ஒரே வேளையில் தோல்வி கண்டது வரலாற்றின் பதிவுக்கானது. 

இத்தேர்தலில் போட்டியிடத் தவறினால் வரப்போகின்ற நாடாளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் தங்களின் பொதுஜன பெரமுன அநாதையாகி விடக்கூடாது என்பதற்காக தன்னைத்தானே பலிக்கடாவாக்கிய நாமல் ராஜபக்சவின் கட்சி அவரது பிறந்தகமான அம்பாந்தோட்டையிலும், புகுந்தகமான குருநாகலையிலும் படுதோல்வி கண்டுள்ளது. 

மூன்று எம்.பிக்களுடன் நாடாளுமன்றத்தில் எதனையும் நிறைவு செய்ய முடியாது என்பதால் அதனை உடனடியாகக் கலைத்து நவம்பர் 14ல் பொதுத்தேர்தலை நடத்துகிறார் அநுர குமார. இத்தேர்தலில் தங்கள்  கட்சிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மகிந்தவும் சஜித்தும் ரணிலும் வழிமுறைகளைத் தேடுகின்றனர். சூட்டோடு சூடாக நடத்தும் தேர்தலில் நூறு ஆசனங்களையாவது பெறமுடியுமென அநுர தரப்பு எதிர்பார்க்கிறது. 

அதேசமயம், இனிமேல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லையென ரணில் முடிவெடுத்து விட்டதாக அவரது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் றுவான் விஜேவர்த்தன அறிவித்துள்ளார். இவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாய்மாமன் மகன். இவரே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையை ஏற்கவிருப்பது பற்றி ஏற்கனவே பல தடவை இப்பத்தியில் நான் குறிப்பிட்டுள்ளேன். 

மார்க்சிஸ கொள்கை சார்ந்த புதிய அரசு இயந்திரத்துக்கு இரத்தம் பாய்ச்ச இருக்கும் நாடுகள் எவையெவை என்பதைப் பொறுத்தே இதன் செல்நெறி கண்டுபிடிக்கப்படும். சிலவேளைகளில் இதனால் பெரும் பூதங்கள்கூட அவ்வப்போது தலை காட்டலாம். 

இந்த அரசியல் நெடுஞ்சாலையில் தமிழர் தேசம்இ தமிழ்த் தேசியம் என்ற பெயரால் உருக்குலைக்கப்பட்டு வருகிறது. தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது என்று முடிவெடுத்து, அதற்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கு முன்னரே தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்த ஓரிருவர் சன்னதம் கொண்டு ஆடத்தொடங்கினர். 

ஜனாதிபதித் தேர்தலுக்கு நாற்பது நாட்கள் இருக்கும்போதே பொதுவேட்பாளராக தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பியான பா.அரியநேத்திரன் தெரிவானார். அதற்கு முன்னராகவே சாணக்கியனைத் தம்முடன் இணைத்துக் கொண்ட சுமந்திரன் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பேன் என்று சூளுரைக்க ஆரம்பித்தார். இங்குதான் தமிழரசுக் கட்சி மூன்றானது. சுமந்திரன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க, சிவஞானம் சிறீதரன் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்க, கட்சியின் துணைத்தலைவர் சீ.வீ.சிவஞானம் இடைநடுவில் நின்று அவரவர் விரும்பியவாறு மக்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென்றார். தப்புக் கணக்குகளைக் காட்டி சஜித் தரப்புக்கே கட்சியின் மத்திய குழு ஆதரவாக முடிவெடுத்ததென அறிக்கை விட்ட சுமந்திரன்இ சஜித்துக்கு ஆதரவாக அவரது கூட்டத்திலும் மேடையேறி தமிழரசின் இழுபறியை சந்தியில் ஏற்றினார். 

பொதுவேட்பாளராக தாம் போட்டியிடுவது பற்றி ஊடக செவ்வியொன்றில் அவ்வேளை அரியநேத்திரன் தெரிவித்த கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது: 

'நான் பொதுவேட்பாளராக வந்ததன் நோக்கம், தந்தை செல்வாவின் கொள்கையின்பால் - தந்த செல்வா என்ன நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அவருடைய நோக்கத்தின் அடிப்படையில்தான் நான் பொது வேட்பாளராக களமிறங்கியதை பார்க்கிறேன். அதேபோல், இதனை தமிழரசு கட்சிக்கு கிடைத்த பெருமையாகத்தான் நான் பார்க்கின்றேன். தமிழரசு கட்சி என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் இந்த பொது வேட்பாளர் விடயத்திலும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இந்த தெரிவுக்கு நான் விரும்பி சம்மதித்தேன். கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவர்கள்கூட இன்னும் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சியின் செயற்பாடுகளில் கலந்து கொள்கிறார்கள். அதேபோல், கட்சியை பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய அரசியல் முன்னெடுப்புகளை

முன்னெடுக்கிறார்கள். கட்சியை சிதைத்தவர்களிடத்தில் எந்த விளக்கமும் கோராமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு தமிழ் தேசியத்துக்காக களமிறங்கியிருக்கும் என்னிடத்தில் விளக்கம் கோருகிறார்கள் என்றால் அவர்களுடைய திட்டம், மனநிலை எப்படிப்பட்டது என்பதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள்தான் (மக்கள்) இதற்கு தக்க பதிலை வழங்கவேண்டும்" என்று அரியநேத்திரன் தெரிவித்திருந்தார். 

திரு. அரியநேத்திரன் தெரிவித்ததை சரியாகப் புரிந்து கொண்ட மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அவர் கேட்டவாறு பதிலை வழங்கியுள்ளனர். இதற்கான உதாரணமாக சில புள்ளிவிபரங்களுடன் ஒப்பீடுகளைத் தருவது இதனை மேலும் புரிந்து கொள்வதற்கு இலகுவானது. 

கடைசியாக இடம்பெற்ற 2020 ஆகஸ்ட் மாத பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்டவர்களில் ஒன்பது பேர் வெற்றி பெற்றனர். தேசியப் பட்டியலும் சேர்த்து பத்து இடங்கள் கிடைத்தன. வடக்கிலும் கிழக்கிலும் இவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 327,168. 

கடந்த மாத ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு வடக்கிலும் கிழக்கிலும் கிடைத்த மொத்த வாக்குகள் 226,342. தமிழரசின் பத்துப் பேர் பெற்றிருந்த 327,168 வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அரியநேத்திரனுக்குக் கிடைத்த 226,342 வாக்குகள் அதிகமானவை. தமிழ்த் தேசிய சிந்தனையில் வாழும் வடகிழக்கு மக்கள் பொதுவேட்பாளரை ஒரு குறியின் அடையாளமாகப் பார்த்து வாக்குகளை வழங்கியுள்ளனர் என்பதை இதனூடாக காணமுடிகிறது. 

அரியநேத்திரனை தோற்கடித்தே தீருவேன் என்று தனிப்பட்ட கோபத்தில் பழி வாங்குவதுபோல் முழங்கி வந்த சுமந்திரனின் வடமராட்சியிலுள்ள பருத்தித்துறை, உடுப்பிட்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அரியநேத்திரனுக்கு பெருமளவு வாக்குகளை அளித்து முதலிடத்துக்கு இழுத்து வந்ததன் மூலம் அப்பகுதி மக்கள் சுமந்திரனின் முகத்தில் கரி பூசியுள்ளனர். 

2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் 11 லட்சம் வரையான மக்கள் வாக்களித்தனர். கடந்த மாத தேர்தலில் இங்கு சஜித்துக்கு 6.7 லட்சம் வாக்குகளே கிடைத்தன. சுமந்திரனின் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2009ல் சஜித்துக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. கடந்த மாத தேர்தலில் இங்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் வாக்குகளே கிடைத்தன. தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இம்முறை சஜித்துக்கு இறங்குமுகமே. ஆனால், தங்கள் வேண்டுகோளை ஏற்று சஜித்துக்கு தமிழ் மக்கள் பெருமளவு வாக்களித்தமைக்காக நன்றி கூறும் அறிக்கையை வெளியிட்டு சுமந்திரன் தமக்குத் தாமே முதுகைத் தடவிக் கொண்டார். 

தனியொருவரின் ஆட்டத்தால் தமிழரசுக் கட்சி தன்னிலை மறந்து, கொள்கை துறந்து நொடிந்து போயுள்ள இன்றைய நிலையில் அதன் மூத்த தலைவர் ஒருவர் மனம் நொருங்கியவாறு கருத்துரைக்கும் ஒளிநாடா ஒன்று பல லட்சம் மக்கள் பார்வைக்கு உலகம் சுற்றி வருகிறது. 

அந்தத் தலைவரின் சொல்லாடலை அச்சொட்டாக இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அதன் சில பகுதி இவ்வாறு பின்வருமாறு அமைந்துள்ளது: காலமான பெரியவரை 'கு.....போவான்" என்றும், இப்போதைய பெரியவரை 'அ..... போவான்" என்றும், கட்சியைப் பிளக்கும் கோடரிக் காம்பை 'பிசாசு" என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதன் ஊடாக தமிழரசுக் கட்சியின் பரிசு கெட்ட இன்றைய நிலைவரத்தை புரியமுடிகிறது. இதைச் சொன்னவரின் நெஞ்சுரத்தை வாழ்த்துவோமா?

No comments