இலங்கை கடற்படையை குற்றம் சாட்டுவதை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும்


இலங்கை கடற்படையையும் , அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

தமிழக முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன், 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பின்னர் நீங்கள் இழுவை மடி தொழிலை செய்வதாக நிறுத்துவதா என்ற நிலைக்கு வர முடியும்.

எமது நாட்டிலே உள்ள கடற்படையையும், அரசாங்கத்தையும் குறை சொல்வதை விட்டுவிட்டு வெளிநாட்டு அமைச்சு இணையதளத்தில் இருக்கின்ற அந்த சட்டத்தை படித்துவிட்டு அதற்கு தகுந்தாற் போல் செயல்பட வேண்டுமே தவிர, தமிழ்நாட்டு மீனவர்களை காலத்திற்கு காலம் ஏமாற்றுவதை போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் ஒரு கவலைக்குரிய விடயம். இதனை அறியாத தமிழ்நாட்டின் மீனவர்களும் உங்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

No comments