சு(ம்)மா சும்மா சொல்பவைகளை கேட்கும் நிலையில் தமிழர் இன்றில்லை! பனங்காட்டான்
எந்தவொரு வேட்பாளரையும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க தமிழரசுக் கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று கூறிக்கொண்டு, தமிழ்ப் பொதுவேட்பாளரை தோற்கடிக்க வேண்டுமென சூளுரைப்பதற்கு கட்சி எவருக்காவது அனுமதி வழங்கியதா? இதனை யாரிடம் கேட்பது?
இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலின் பிரதான நான்கு வேட்பாளர்களும் தங்கள் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தலுக்கு இன்னமும் 27 நாட்கள் இருப்பதால் பரப்புரை வேகங்கொண்டு சூடு பிடிக்க இன்னும் சில நாட்கள் வேண்டும்.
39 வேட்பாளர்களில் ஒருவரான ஐதுரூஸ் இலியாஸ் காலமானதால் வேட்பாளர் எண்ணிக்கை 38 ஆகியிருப்பினும் வாக்காளர் அட்டை சுமார் இரண்டு அடி நீளமானதாக இருக்கும்.
ரணில், சஜித், அநுர குமார, நாமல் ஆகிய நான்கு பிரதான வேட்பாளர்களும் தலா 100 பரப்புரை கூட்டங்களை நடத்த ஏற்பாடாகியுள்ளது. இதன்படி பார்க்கின் நான்கு வாரங்களுள் 400 முக்கிய பரப்புரை கூட்டங்கள் இடம்பெறப்போகின்றன.
இதனை எழுதும்வரை எந்தவொரு வேட்பாளரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக வாய்வேட்டு அறிவிப்புகள் றொக்கட் வேகத்தல் பறக்க ஆரம்பித்துள்ளது. வழக்கமாக தேர்தல் காலங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கப் போவதாக வெளிவரும் அறிவிப்பு, சஜித் பிரேமதாசவிடமிருந்து இம்முறை வந்துள்ளது. இவர் ஜனாதிபதியாகத் தெரிவானாலும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இதற்குத் தேவை என்பதை வாக்காளர்கள் மறந்துவிட்டனர் என நினைக்கிறார் போலும். சகல அரசாங்க ஊழியர்களுக்கும் அடுத்த ஜனவரியில் 24 வீத சம்பள அதிகரிப்பு என்றும் அறிவித்துள்ளார்.
ஜே.வி.பி. வேட்பாளர் அநுர குமார திசநாயக்கவே இதுவரை கூடுதலான உத்தரவாதங்களை அறிவித்தவராவார். வறியவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிவாரணம், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறைப்பு என்பவைகளோடு தமது ஆட்சியில் புதிய அரசியலமைப்பு வருமென்றும் அறிவித்துள்ளார். நல்லாட்சிக் காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடமிருந்து அடிக்கடி கேட்டு புளித்துப்போன கதை இது.
ரணில் இப்போது ஜனாதிபதியாக இருப்பதால் சில அறிவிப்புகளை தமக்குரிய நிறைவேற்று அதிகாரம் ஊடாக வெளியிட்டு வருகிறார். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வசதி குறைவானவர்களுக்கு மானியம் என்பவை இதுவரை இவர் வெளியிட்ட சில அறிவிப்புகள். இதனை தேர்தல் சட்டமீறல் என்று சுட்டியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், செப்டம்பர் 21க்கு முன்னர் இவைகளை வழங்க முடியாதென தடை விதித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச தமது முதலாவது பரப்புரைக் கூட்டத்தை அநுராதபுரத்தில் நடத்தினார். மகனின் வெற்றியில் நம்பிக்கையில்லையாயினும் புத்திர பாசம் மகிந்தவை அங்கு உரையாற்ற வைத்தது. அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த பொதுஜன பெரமுனவின் எந்தவொரு எம்.பி.யும் இதில் பங்குபற்றாதது இன்றைய பேசுபொருள்.
எக்காரணம் கொண்டும் தங்களால் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரமும், காவற்துறை அதிகாரமும் வழங்க முடியாதென இக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்த நாமல் ராஜபக்ச, வடக்கு கிழக்கு இணைப்பும் கிடையாது என்று அடித்துக் கூறினார். தம்மை நேர்மையான உண்மையாளர் என காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு தெரிவித்தாரெனினும், சிங்கள பௌத்த மக்களுக்கு இதனூடாக ஒரு செய்தியைத் தெரிவிப்பதே இவரது பிரதான நோக்கம்.
காணி அதிகாரம் தரப்படும், ஆனால் காவற்துறை அதிகாரம் கிடையாது என்று ரணில் கூற, காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தம்மால் வழங்கப்படுமென சஜித் உத்தரவாதம் வழங்க, புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமென அநுர குமார தெரிவிக்க, ஒன்றுமே கிடையாது என்று அப்பட்டமாகக் கூறுவதால் கோதபாய பெற்றது போன்று பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளை அள்ளு கொள்ளையாக பெறலாமென்பதே நாமலின் இலக்கு.
அடுத்தடுத்த வாரங்களில் இவர்கள் அனைவரும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் பொழுது இன்னும் என்னென்ன விண்ணாணங்களை அவிழ்க்கப் போகிறார்களோ தெரியாது.
சிங்கள தேச நிலைமை இவ்வாறிருக்க தமிழ்த் தேசிய பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் (கவனிக்கவும் இவரது பெயர் அரியநேத்திரன் - அரியநேந்திரன் அல்ல) தமது பரப்புரையை தந்தை செல்வா சமாதியில் வணக்கம் செலுத்தி ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் புனிதமண்ணில் முதலாவது கூட்டத்தை நிகழ்த்தியுள்ளார். பொலிகண்டியிலிருந்து பொத்துவில்வரை பரப்புரை கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சிங்கள வேட்பாளர்களை ஆதரித்து ஏமாற்றப்பட்ட காயங்களின் வலியே இம்முறை தமிழ்ப் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இதனைப் புரிந்து கொண்டும் புரியாதது போன்ற நடிப்பில் - ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்று, தனிநாடு கேட்ட தமிழரசுக் கட்சியில் இன்னமும் சிலர் இருக்கிறார்கள் என்றால், இவர்களை தமிழ்த் தேசியவாதிகள் என்று எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
சிங்கள வேட்பாளர்கள் தங்கள் பரப்புரையை ஆரம்பித்து விட்ட நிலையிலும், தமிழரின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாடு என்ன என்று பகிரங்கமான நிலையிலும், அவர்களில் யாரோ ஒருவருக்கு வழங்கிய ஆதரவு உறுதியை நிலைநாட்டவே இவர்கள் துடிக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான அரியநேத்திரன் தமிழ்த் தேசியக் கொள்கையின் வழியில் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்து பொதுவேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லையெனினும், அதன் மூத்த முக்கியமானவர்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கின்றனர். அரியநேத்திரன் வேட்பாளர் என்பதை அறிவிப்பதற்கு முன்னரே தமிழரசுக் கட்சியின் தலைவர்களான மாவை சேனாதிராஜாவும், சிவஞானம் சிறீதரனும் கொள்கை ரீதியாக பொதுவேட்பாளரை ஆதரித்தவர்கள்.
ஆனால், சுமந்திரனும் சாணக்கியனும் மட்டும் இன்னமும் பொதுவேட்பாளரை எதிர்த்து வருகிறார்கள். அரியநேத்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து அவரை நீக்க வேண்டுமென திட்டமிட்டு செயற்படுகிறார்கள். தமிழரசின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இவர்களோடு சேர்ந்து இயங்கினாராயினும் தற்போது சற்று தளம்பல் நிலையில் காணப்படுகிறார். இனிமேல் தேர்தல் எதிலும் தாம் நிற்கப்போவதில்லையென இவர் அண்மையில் அறிவித்திருந்ததும் ஞாபகம் இருக்கிறது.
தமது இல்லம் தேடி வந்த அரியநேத்திரனுக்கு மாலை மரியாதை அளித்து தனது வாழ்த்தையும் ஆதரவையும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். சிறீதரன் எம்.பி. தமக்கான தேர்தல் சின்னமாக சங்கை சிபார்சு செய்தவரே சிறீதரன்தான் என்று அரியநேத்திரன் இங்கு தெரிவித்ததனூடாக தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானவரின் பங்களிப்பு இவ்விடயத்தில் பூரணம் பெற்றிருந்தது என்பது தெரியவந்துள்ளது. இது, பொதுவேட்பாளரை எதிர்க்கும் உள்வீட்டுக்காரர்களுக்கு நிச்சயம் ஒரு தலையிடிதான்.
எவரையும் ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி இதுவரை முடிவெடுக்கவில்லையென்றும், தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே முடிவு அறிவிக்கப்படுமென்றும் கூறி வரும் சுமந்திரன், பொதுவேட்பாளரை எப்படியாவது தோற்கடிப்பேன் என்று கட்சி அனுமதி கொடுத்ததா? கட்சியின் முடிவு வெளிவருவதற்கு முன்னர் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிக்கப் போவதன் அறிகுறியாகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார் என்பதை தமிழரசுக் கட்சியினரே அறிந்துள்ளனர்.
தம்முடைய சொற்படிதான் எதுவும் நடைபெறுமென்ற இறுமாப்பில் தாங்கள் அறிவிக்கும் வேட்பாளருக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் சுமந்திரன் அறிவித்து வருவதுகூட அவர் ஆதரவளிக்க விரும்பும் சிங்கள வேட்பாளரை நம்ப வைக்கவும், மகிழ்ச்சிப்படுத்தவுமே.
இவ்விடத்தில், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் அண்மையில் வெளியிட்ட இரண்டு கருத்துகள் சுமந்திரனுக்கு சமர்ப்பணம்:
• திரு. சீ.வீ.கே.சிவஞானம் - 'தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறி. அவர்கள் சிந்தித்துச் செயற்படத் தயாராகி விட்டனர்.
• அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலையரசன் - 'மக்கள் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது இன்றைய அவசியம்.
சு(ம்)மா சும்மா சொல்லிக் கொண்டிருப்பதை கண்மூடிக் கொண்டு கேட்டு செயற்படும் நிலையில் தமிழர்கள் இன்று இல்லை. தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் அவ்வாறு இல்லை என்பது இப்போது தெரிகிறது.
Post a Comment