தமிழரசின் மூத்த துணைத்தலைவரின் மூன்று முக்கிய கருத்துகளுக்கு சுமந்திரன் கூறும் பதில் என்ன? பனங்காட்டான்
தமிழரசுக் கட்சி ஆதரவளித்த வேட்பாளர்கள் தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துள்ளனர். இனிமேல் தமிழரசு ஆதரிப்பவர்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா? தனிப்பட்ட வேட்பாளரைச் சுட்டிக்காட்டி ஆதரவு வழங்குவது பின்னர் சிக்கலான நிலையை உருவாக்கும் என்கிறார் தமிழரசின் மூத்த துணைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி 1960ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்தொகுதிக்கான முதலாவது பொதுத்தேர்தல் அதேயாண்டு மார்ச் மாதம் இடம்பெற்றது.
தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், சமசமாஜ கட்சி, கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களுடன் மேலும் இருவர் சுயேட்சையாகப் போட்டியிட்டனர். இவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் வணிகம் செய்து வந்தவர். அதற்கேற்றாற்போல் அவரது சின்னம் தராசு. இத்தேர்தலில் ஆறாவதாக வந்த இவருக்கு கிடைத்த வாக்குகள் 224 மட்டுமே. இவ்வளவு தொகை வாக்குகள் கிடைத்தது அவருக்குப் பெரும் ஆச்சரியம்.
பத்திரிகையாளர் ஒருவர் இவரைப் பேட்டி கண்டபோது தேர்தலில் போட்டியிட்ட நோக்கத்தை இவர் அழகாகச் சொன்னார். 'வருங்காலத்தில் எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளுக்கு நற்காரியங்கள் நடைபெறும்போது லெக்சன் கேட்ட இன்னாரின்..... என்று எனது பரம்பரையை சொல்லுவார்கள்" என்பது இவரது பதில். ஆயிரம் ரூபா கட்டுப்பணத்துடன் இவர் பிரபல்யம் ஆகிவிட்டார்.
இது வேடிக்கைக் கதையல்ல. உண்மையாக இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 39 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுள் சிலர் பினாமிகளாக இறக்கப்பட்டுள்ளனர். 16 பேர் சுயேட்சைகள். இந்தச் செய்திகளைப் படிக்கும்போது 1961ல் நல்லூர் தொகுதித் தேர்தல் ஞாபகத்துக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. அதாவது சுயேட்சைகளாக போட்டியிடும் பலருக்கும் எந்தக் கொள்கையும் இல்லை. அரசியல் செல்நெறியும் கிடையாது. எதற்காக, யாருக்காக போட்டியிடுகிறோம் என்பதும்கூட சிலருக்குத் தெரியாது. இதனால்தான் இவர்களை சுயஇச்சைகள் என்று கூறுவர்.
1960க்கும் 2024க்கும் இடையில் சுமார் 65 ஆண்டுகள் ஓடிவிட்டதாயினும், தேர்தல் காட்சிகளில் மாற்றம் தெரியவில்லை. எழுபத்தையாயிரம் ரூபாவாக இருக்கும் சுயேட்சைகளின் கட்டுப்பணத்தை ஒரு மில்லியன் ஆக்கினாலும் வேட்பாளர் எண்ணிக்கை குறையாது. காரணம், காசுப்புழக்கம் அவ்வாறிருக்கிறது.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் முதலில் கட்டுப்பணம் செலுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க. எழுபத்தைந்து வயதான இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்தவர். 1977ம் ஆண்டிலிருந்து 45 ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவர். ஆனால் இந்தத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரது அரசியல் வரலாற்றில் இது விநோதமான காலகட்டம்.
தேர்தல் வேட்பாளர் நியமனத்தின் பின்னர் 34 அரசியல் கட்சிகளையும் பிரமுகர்களையும் இணைத்த தமது தேர்தல் கூட்டணியை இவர் அறிவித்துள்ளார். எதிர்த் தரப்பில் 27 அரசியல் கட்சிகளும் பிரமுகர்களும் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். களத்தில் கடைசியாக இறங்கிய பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ச வெற்றி கிடைக்காவிடினும் 2029 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரோகண வைபவமாக இதனைப் பார்க்கிறார். ஜே.வி.பி. வேட்பாளர் அநுர குமார திசநாயக்க நம்பிக்கையோடு போட்டியில் இறங்கியுள்ளார்.
தேர்தல் முடியும்வரை கட்சித்தாவல்கள் தொடருமாதலால் யார் யாருடன் என்பதை இப்போது சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் இந்தக் காட்சி இடம்பெறப் போகிறது. தேர்தல் ஆணையம் நாளும் கோளும் பார்த்து காலத்தையும் நேரத்தையும் தீர்மானித்திருந்தாலும் கட்சிகளும் சொரியல்களும் தம்பாட்டிலேயே செயற்படப் போகின்றன. வேட்பாளர் நியமனப் பத்திரம் தாக்கலுக்கு ராகு காலம் இல்லாத நேரம் பார்த்து தேர்தல் ஆணையம் நேரத்தை அறிவித்தது. மகிந்தவின் பெரமுன சார்பில் போட்டியிடவிருந்த சூதாட்ட கோடீஸ்வரரான தம்மிக்க பெரேரா சோதிட வழிகாட்டலில் இறுதி நேரத்தில் விலகிக் கொண்டுள்ளார். வேட்பாளர் தெரிவை 7ம் திகதி மேற்கொள்ள வேண்டாமென்றும் தமக்கு அதிர்ஸ்டமான 6ம் திகதியை இவர் சிபார்சு செய்தபோதும் மகிந்த தரப்பு அதனை ஏற்காததால் வேட்பாளராகும் அதிர்ஸ்டம் நாமல் ராஜபக்சவுக்குப் போனது.
வேட்பாளர்களின் சின்னங்கள் பற்றியும் சுவையான தகவல்கள் வந்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் கிடைத்துள்ளது. நாட்டில் நிலவிய எரிவாயு தட்டுப்பாட்டை அவர் நீக்கியதால், இறைவன் ஆசிர்வாதத்துடன் இச்சின்னம் ரணிலுக்குக் கிடைத்ததாக அவரின் ஆலோசகர்களில் ஒருவரான ஆசு மாரசிங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதற்கு மறுத்தானாக, எரிவாயு இல்லாத வெற்றுச் சிலிண்டர் ரணிலுக்கு மிகப் பொருத்தமான சின்னம என்று அநுர குமார திசநாயக்க தரப்பு நையாண்டி செய்துள்ளது. நல்லவேளை குரங்கு, பன்றி போன்ற விலங்குகள் எவருக்கும் கிடைக்காதது.
ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் சங்கு. தமிழர்களின் சுபகாரியங்கள், வழிபாடுகள், முற்கால அரசர்களின் அரண்மனைகள் ஆகியவற்றில் சங்கு பிரதான இடம்பெறும் ஒன்று. தமிழரின் பலத்தையும் ஒற்றுமையையும் போட்டியிடும் நோக்கத்தை பூரணப்படுத்துவதாக இச்சின்னம் அமைந்துள்ளது என்பது பலரதும் கருத்து. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் சங்குச் சின்னத்தையும் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளனர் போலத் தெரிகிறது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது தமிழ்ப் பொன்மொழி.
தென்னிலங்கையைப் பொறுத்தளவில், தமிழ்ப் பொதுவேட்பாளரை போட்டியில் இறக்கியுள்ள தமிழ்ப் பொதுக்கட்டமைப்பினரை சந்திப்பதில் ரணிலும் சஜித்தும் போட்டியாக ஈடுபட்டுள்ளனர். பொதுவேட்பாளரை தடுக்க முடியாது போனால், அவருக்கு வாக்களிப்பவர்களின் இரண்டாவது வாக்கையாவது தங்களுக்குத் தருமாறு இறுதி நேரத்தில் பிச்சை கேட்குமளவுக்கு சிங்களத் தலைவர்கள் இறங்கியுள்ளதை முதன்முறையாக பார்க்க முடிகிறது. இதுவே தமிழ்ப் பொதுவேட்பாளருக்குக் கிடைத்த மிகப்பெரும் பலமாகும்.
அதேசமயம், இணைந்த வடக்கு கிழக்கில் சம~;டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய தீர்வை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளரை ஆதரிப்பதென்று தமிழரசுக் கட்சி முடிவெடுத்துள்ளதாக அதன் எம்.பிக்களில் ஒருவரான சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழான காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம், வடக்கு கிழக்கு இணைந்த கட்டமைப்பு ஆகியவற்றை தமிழருக்கான தீர்வாக இதுவரை எந்தவொரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்கள் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நம்பி அவர்களுக்கு ஆதரவளிக்க தமிழரசுக் கட்சி முடிவெடுத்திருப்பது என்பது அக்கட்சியின் தற்கொலை முடிவுக்குச் சமமானது.
யதார்த்தமாகக் கூறின், தமிழரசுக் கட்சி கேட்கும் சம~;டி அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வை வலியுறுத்தியே தமிழ்ப் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் போட்டியிடுகிறார். இதனை அவரே பல தடவை பல ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் உள்ளார். இதனை நன்றாக அறிந்துகொண்டும் பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்;பவர்களை சிங்களத்துக்கான தரகர்களாகவே பார்க்க முடிகிறது.
தமிழ் மக்களின் வாக்குகளை தம்மால் பெற்றுத்தர முடியுமென்று தெரிவித்தவரை நம்ப முடியாதுள்ள சிங்கள வேட்பாளர்கள், தமிழ்ப் பொதுக்கட்டமைப்பினரை நேரடியாகச் சந்திப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை நன்கு புரிந்து கொண்டதாலோ என்னவோ தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் திரு. சி.வீ.கே.சிவஞானம் மூன்று முக்கியமான விடயங்களை ஊடக சந்திப்பொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது கருத்துகள் இவர் சார்ந்த தமிழரசுக் கட்சியினது என்றில்லாமல் இவரது தனிப்பட்டவையாக இருப்பினும், இவற்றுக்கு பதிலளிக்க வேண்டியது சுமந்திரனின் கடப்பாடாக அவதானிக்கப்படுகிறது.
திரு. சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்த மூன்று கருத்துகளும் பின்வருமாறு:
• இலங்கையில் இடம்பெறும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்கள் அநேகமாக தோல்வியையே சந்தித்துள்ளனர்.
• தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா என்பது கேள்விக்குறி. அவர்கள் சிந்தித்து செயற்பட தயாராகி விட்டனர்.
• தனிப்பட்ட வேட்பாளரை மாத்திரம் சுட்டிக்காட்டி ஆதரவு வழங்குவது தேர்தல் முடிவின் பின்னர் சிக்கலான நிலையை உருவாக்கும்.
தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளர்களிடம் எதனையும் எதிர்பார்ப்பதற்கில்லை. இது கடந்த காலம் தந்த கசப்பான அனுபவம். இந்நிலையில் தங்கள் பலத்தையும் கோரிக்கையையும் ஒரே குரலில் சர்வதேசத்துக்கு தெரிவிப்பதற்காகவே பொதுவேட்பாளர் ஒருவர் முதன்முறையாக களத்தில் இறக்கப்பட்டுள்ளார். இதனால், தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டியவராக சுமந்திரன் காணப்படுகிறார்.

Post a Comment