வேலுக்குமார் : கொடுக்கல் வாங்கலே காரணமாம்!
ஒரே இரவில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவுக்கு ஆதரவளித்திருக்க கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான் தெரிவித்தார்.
”வேலுகுமார் எம்.பி ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சி ஒன்றின் உறுப்பினராவார். ஆனால், அவர் கடந்த வாரம் இடம்பெற்ற மொனராகலை மற்றும் பசரை கூட்டங்களிலும் பங்குபற்றியிருந்தார். அதேபோன்று சஜித் பிரேமதாசவுடன் அக்கட்சி நடத்திய சந்திப்புகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
கடந்தவாரம் வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தொடர்பில் கடந்த காலத்தில் சில விடயங்கள் அரசல் புரசலாக பேசப்பட்டன.
என்றாலும், அவரிடம் வினவிய போது, “பைத்தியமா, நான் போக மாட்டேன்“ என்றார். இரவு உறங்கிவிட்டு காலையில் எழுந்து பார்த்தால் ரணிலுடன் இருக்கிறார். ஆகவே, இவரது திடீர் மாற்றத்துக்கு பல நினைக்க முடியாத செயல்பாடுகள் இடம்பெற்றிருக்கும்.
இரவு எம்முடன் இருந்தவர் காலையில் ரணிலிடம் செல்ல வாய்ப்பில்லை. ஒரே இரவில் அரசியல் புரட்சிகள் இடம்பெறுவதில்லையே. ஆகவே, பாரதூரமான ஒரு விடயம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் பெற்றிபெற எம்.பிகளை எவ்வாறு விலைக்கொடுத்து வாங்குகின்றனர் எனத் தெரியும். ரணில் விக்ரமசிங்க, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக உறுதியளித்துவிட்டு அதனைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை.
மலையகத்துக்கு சென்று மக்களிடம் முகங்கொடுக்க முடியாத நிலையில் ரணில் உள்ளார். இவ்வாறான பின்புலத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி ஒருவர் ஒரே இரவில் ரணில் பக்கம் பல்டி அடிக்கிறார் என்றால், மலையக மக்களுக்காக அல்ல மாறாக தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் ஏதும் இடம்பெற்றிருக்க கூடும்.” என்றார்.

Post a Comment