கடற்படை மாலுமி மரணம்:விபத்தா? கொலையா??





இந்திய மீனவர்களது தாக்குதலில் இலங்கை கடற்படை அதிகாரி நெடுந்தீவு கடற்பரப்பில் பலியாகியமை விபத்து எனவும் அதனை திட்டமிட்டு இந்திய மீனவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டாக மாற்றியிருப்பதாகவும் ஆட்சேபனைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைதுசெய்யக்கோரி யாழ். மாவட்ட கடற்தொழில் அமைப்புகளால், போராட்டமொன்று யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்றலில் மீண்டு;ம் இன்று திங்கட்கிழமை (01) நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மருதடிச் சந்தியில் ஆரம்பித்த மீனவர்களது ஊர்வலமானது  இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.அதன்போது கடற்தொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனிடையே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 தமிழக கடற்தொழிலாளர்கள்  மீண்டும் இன்று திங்கட்கிழமை (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் 4 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மறுபுறத்தே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சந்தேகத்திற்கிடமான முறையில் தீக்காயங்களுக்குள்ளான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளரான சரவணபவானந்தன் சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 20ஆம் திகதி , தனது மீன் வாடியில் தூக்கத்தில் இருந்த போது இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டினை வீசி விட்டு தப்பி சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.


No comments