தமிழரசு ஒற்றுமையே சம்பந்தர் ஆத்மா சாந்திக்கு வழி!
மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்கு கொழும்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற அஞ்சலியின் பின்னராக நாளை திருகோணமலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
இதனிடையே இரா.சம்பந்தனின் நீண்டகால வாழ்வின் அடிப்படையான அரசியல் அபிலாசைகள், கனவுகள் மெய்ப்பட வேண்டுமெனில், அதற்கான பயணத்தில், சக தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பயணிக்க அவர் வழி நடாத்திய தமிழரசுக் கட்சி முன்வரவேண்டும்.தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்வருவதே அவருக்கான ஆழமான அஞ்சலியாக இருக்க முடியுமென மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்வின் இறுதிவரை, தந்தை செல்வா முன்மொழிந்த சமஸ்டித் தீர்வுக் கொள்கையில் பற்றுக்கொண்டு, பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வைப் பெற முயற்சித்த இரா.சம்பந்தனின் மறைவு தமிழினத்திற்கும் தேசிய இனப் பிரச்சினை நாட்டில் இன்னமும் உண்டு என நம்புகின்ற சிங்கள முஸ்லீம் சமூக சக்திகளுக்கும் கவலையை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுவிட்ட வேளையில், அதன் பிளவை தடுக்க முடியாதா எனும் கவலையுடனும் அவர் காணப்பட்டார். எனினும் கட்சிக்குள் தனக்கிருந்த அதிகாரங்களைக் கொண்டு அவசியமான கருமங்களை ஆற்றி, முன்னமே கூட்டமைப்பின் முரண்பாடுகளை சீர் செய்து பிளவினைத் தடுக்கத் தவறியிருந்தமை அவரது நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் காலங்களை கறைபடிந்ததாக்கி விட்டமை துயர் தரும் விடயமாகியுள்ளதெனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
Post a Comment