தமிழ்த் தேசிய கட்சிகளிடம் வளர்ந்துவரும் பிளவு கண்ட ஜெய்சங்கரின் ராஜதந்திரம்! பனங்காட்டான்


இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசிய பிரதிநிதிகள் எண்மருடன் நடத்திய சந்திப்பு அவருக்கு எதனை எடுத்துக் கூறியது? 2009 வரை ஒன்றாக நின்றவர்கள் பதினைந்து ஆண்டுகளில் நான்காகி, பிரதான விடங்களில்கூட ஒரே குரலாக வரமுடியாதுள்ளனர் என்பதை அறிய வைத்தது அவரது ராஜதந்திரம். 

வடக்குக்கு முதலாவதாகச் சென்று ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடி பிடித்துப் பார்த்தவர் ரணில் விக்கிரமசிங்க. அடுத்தடுத்துச் சென்றவர்கள் சஜித் பிரேமதாசவும், அநுர குமார திசநாயக்கவும். இவர்கள் எல்லோருக்கும் கை கொடுத்தது ராஜிவ் - ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் 13ம் திருத்தமும் மாகாண சபையும்தான். 

இவர்கள் மூவருக்குள்ளும் சில விடயங்களில் வித்தியாசமானவராக அனுரவைப் பார்க்கலாம். ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பு வருவதற்கு முன்னரே இது தொடர்பாக ஐந்து வெளிநாடுகளுக்குச் சென்று பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார் இவர். சுவீடன், அமெரிக்கா, இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை இதுவரை சுற்றியுள்ளார். இவருக்கு இந்நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுநிகழ்வுகளை நட்பு ரீதியான கூட்டங்கள் (Friendly Meetings) என்று பெயரிடப்பட்டது. ஆனால், இங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளும் கேள்வி பதில்களும் வரப்போகும் தேர்தலை மையப்படுத்தியவை. 

ரணிலும் சஜித்தும் ஏறுக்குமாறாக 13ம் திருத்தம், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பற்றி தமிழர் தாயகத்தில் குறிப்பிட்டபோது, அநுர மட்டும் தடுமாற்றமின்றி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியவர். ''தற்போதைய நிலையிலேயே 13ம் திருத்தம் பேணப்படும்" என்பதே அநுரவின் சொற்பதம். 

அதாவது, தற்போது மாகாண சபைகளுக்கு காணி அதிகாரமும் காவற்துறை அதிகாரமும் இல்லை. ஆரம்பத்தில் ஒன்றாகவிருந்த வடக்கு கிழக்கு மாகாண சபை இப்போது இரண்டாக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இரண்டினதும் இணைப்பை சட்டபூர்வமாக இல்லாமல் செய்தவர்களும் அநுர தரப்பினரே. 


எனவே, தற்போதுள்ள நிலையிலேயே 13ம் திருத்தம் பேணப்படும் என்பதானது எதுவுமேயில்லாத ஒரு சபையை அமைக்க தாங்கள் எதிர்ப்பில்லை என்பதே அநுரவின் நிலையான நிலைப்பாடு. 

தமிழர்களின் இனப்பிரச்சனைத் தீர்வு, தேர்தல்கள் என்றெல்லாம் வரும்போது, முரண்பாடான தமிழ் தலைவர்கள் ஒரு விடயத்தைக் கூறுவார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்நாட்டுத் தீர்வு விடயங்களில் தலையிடக்கூடாது என்று இவர்கள் கூறுவதைக் கேட்கக்கூடியதாகவுள்ளது. 

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்தும் அவர்களின் அமைப்புகளிடமிருந்தும் தேர்தல் செலவுக்கு நிதி கேட்கலாம், வாங்கலாம், சுருட்டலாம். ஆனால், நேரடியாக கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவுகளிலோ, பிரச்சனைத் தீர்வு விடயங்களிலோ தலையிடக்கூடாது என்பதே இவர்களின் கருத்து. 

இதனை இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், ஜனாதிபதித் தேர்தலையொட்டி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) அநுர பற்றி அவரது பரம எதிரிகள்கூட எதுவும் சொல்லவில்லை. ரணில், சஜித் உட்பட சிங்களக் கட்சிகள் எதுவும் அநுரவின் வெளிநாட்டு விஜயங்களை விமர்சிக்கவும் இல்லை. வெளிநாடுகளில் நட்பு ரீதியான கூட்டங்கள் பெருமளவில் அவருக்கு அள்ளிக் கொடுக்கின்றன. அதுவே அவரது தேர்தலுக்கான மூலதனம். 

1971 ஏப்ரல் சேகுவெரா புரட்சியின் பின்னர் ஆயிரக்கணக்கான ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இலங்கை அரசின் கைது, கொலை என்பவற்றிலிருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அடைக்கலம் பெற்றனர். இப்போது அவர்களே தங்களின் ஆதரவை பெருமளவில் அநுரவுக்கு வாரி வழங்குகின்றனர் என்பது இலங்கை அரசுக்கோ அதன் புலனாய்வுத்துறைக்கோ தெரியாததல்ல. 

இதனை மையமாக வைத்துப் பார்க்கின், உலகளாவிய ரீதியில் சிங்கள மகாஜனங்களின் ஆதரவு அநுரவுக்கு மேலோங்கிச் செல்கிறது என்று சொல்லலாம். அவர்கள் வழங்கும் ஆதரவு உள்நாட்டுப் போட்டிக்கு நிச்சயமாக அநுரவுக்கு கை கொடுக்கும். ஆனால், போட்டி என்பது மும்முனையாகவே இருக்கும். 

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற செய்தி அல்லது வதந்தி வேகமாகப் பரப்பப்படுகிறது. அண்மையில் ஒரு பொது நிகழ்வில் இவரிடம் - நீங்கள் போட்டியிட்டால் வெற்றி பெறுவீர்களா - என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, தோல்வி அடைவதானால் நான் போட்டியிடமாட்டேன் என ரணில் அளித்த பதிலினால் அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர். 

இந்த மாதம் 30ம் திகதியிலிருந்து நான்கு பிரதான பொதுக்கூட்டங்களை ரணில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். முதலாவது கூட்டம் 30ம் திகதி மாத்தறையில் இடம்பெறும். யூலை 7ம் திகதி பதுளையிலும், யூலை 14ம் திகதி கண்டியிலும், யூலை 21ம் திகதி காலியிலும் இவை நடைபெறவுள்ளன. இவ்வேளையில் ரணில் தாம் போட்டியிடப்போவதை அறிவிப்பாரென அவரது ஐக்கிய தேசிய கட்சியினர் அறிவித்து வருகின்றனர். எனினும், ரணில் சுயேட்சை வேட்பாளராகவே களத்தில் இறங்குவாரெனவும் இவர்கள் கூறுகின்றனர். 

ரணிலின் அறிவிப்பின் பின்னரே மகிந்தவின் பொதுஜன பெரமுன தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும். இப்போதுள்ள அரசியல் காலநிலை ரணிலையே பொதுஜன பெரமுன ஆதரிக்க வேண்டியதாகவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டுமென ரணிலை நெருக்கி வந்த பசில் ராஜபக்ச அதில் தோல்வி கண்ட பின்னர் இப்போது அமைதி காக்கிறார். இதனால் ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஒதுங்கிக் கொள்வாரென எதிர்பார்க்கலாம். 

எண்பது வயதை அண்மித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச மூப்பு, பிணி, நடமாட்ட இயலாமை காரணங்களால் மட்டுமன்றி, தமது மகன் நாமலின் எதிர்கால அரசியல் நலனையும் கருதி ரணிலுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலூடாக நாமலை சிங்காசனத்தில் ஏற்றலாம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்துள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. 

இந்தப் பின்னணியில் ரணில் பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று (பறித்தும், பிரித்தும்) போட்டியிடுவதன் மூலம் இலகுவாக வெற்றி பெறலாமென நம்புகிறார். சிலவேளை இது சாத்தியப்படலாம். இதற்காகவே சில விடயங்களை தாமாகவே வலிந்து முன்னெடுத்து அவைகளை செயற்படுத்த முடியாதிருப்பதையும் கவனிக்க முடிகிறது. 

கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின்னர் இனப்பிரச்சனை என ஒன்றுமில்லை என்பதே அவரது தரப்பின் கோசமாக இருந்தது. ஆனால், ரணில் ஜனாதிபதியானதும் பல்லவி வேறானது. தமிழர் தரப்பை ஆற்றுப்படுத்த (ஏமாற்ற) 13ம் திருத்தமும் மாகாண சபைகளும் என்ற விடயத்தை ரணில் உள்வாங்கினார். கடந்த வருட சுதந்திர தினத்துக்கு முன்னர் 13ம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். 

தமிழ்த் தேசிய கட்சிகளை அழைத்து அவர்களை நம்ப வைத்து இதனை உறுதிப்படுத்தினார். இந்திய பிரதமர் மோடியிடமும் இந்த உறுதியை வழங்கினார். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. கடந்த வருட ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது 13ம் திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் அவசியமானதால் அது நடைமுறைப்படுத்தப்படுமென கூறி நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் வேண்டினார். 

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 13ம் திருத்தம் முக்கியமான ஒன்றாக அரசியல் அமைப்பில் உள்ளது என்றும், இதனை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். 

இந்த வருடம் ஜனவரி மாதம் 4ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ரணில் அங்கு உரையாற்றுகையில் 13ம் திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை என்றும் இதில் மத்திய அரசு தலையிடாது என்றும் ஒருபடி மேலே சென்று தெரிவித்தார். இவர் ஜனாதிபதி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் இதுவரை ஓர் அங்குலம்கூட முன்னேறவில்லை. 

கடந்த ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோது தாங்கள் ஜனாதிபதி ரணிலுடன் தீர்வு தொடர்பாக பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், 'தீர்வை பற்றி பேசிக்கொண்டேயிருப்பது தீர்வாகாது. இருக்கும் அதிகார பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும்" என்று நெற்றியில் அடிப்பதுபோல ஆலோசனை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தார். 

மோடியின் மூன்றாவது ஆட்சியிலும் வெளியுறவு அமைச்சராகியுள்ள ஜெய்சங்கர் கடந்த வாரம் குறுகிய விஜயமாக இலங்கைக்கு வருகை தந்தபோது வழமைபோல தமிழர் தரப்பையும் சந்தித்தார். தமிழ்த் தேசிய தரப்பில் நான்காக நிற்கும் கட்சிகளையும் சேர்ந்த எண்மர் இச்சந்திப்பில் பங்குபற்றினர். 

கடந்த வருடம் சந்தித்தபோது தெரிவித்த விடயங்களையே அதே பல்லவியில் தமிழ்த் தேசிய தரப்பினர் ஜெய்சங்கரிடம் தெரிவித்தது அவருக்கு சப்பென்று இருந்திருக்கும். அதனாலோ என்னவோ தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தையும் தமிழர் தரப்பினர் ஜெய்சங்கர் முன்னால் எடுத்துப் போட்டனர். தமிழரசுக் கட்சியினர் இவ்விடயத்தில் பிளவுபட்டிருப்பதை மட்டுமன்றி, நான்கு அணியினரும் மூன்றாகி நிற்பதையும் ஜெய்சங்கர் கண்டு கொண்டார். 

2009 வரை ஒன்றாக இருந்தவர்கள் பதினைந்து ஆண்டுகளில் நான்காகியது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்காது. இவர்கள் ஒரே குரலில் நின்றிருந்தால்தான் அவர் ஆச்சரியப்பட்டிருப்பார். தாம் எதுவுமே பேசாது, தமிழ்த் தேசிய பிரதிநிதிகளை பேச வைத்து அவர்கள் மேலும் மேலும் பிளவுண்டு போவதை அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திரம் கண்டுகொண்டது. 

No comments