ரணிலால் பயனில்லை:சிவகரன்!



ரணில் விக்ரமசிங்கவின்  மன்னார்  விஜயத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரணிலின் விஜயம் அரசியல் நலன் சார்ந்தே அமைந்துள்ளது.இந்திய பிரதமரின் இலங்கை வருகையை ஒட்டி தனது அரசியல் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் விவகாரத்திற்காக மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

காற்றாலை உற்பத்தியை இந்தியாவிற்கு வழங்குகின்ற விவகாரம் தொடர்பாகவும் தலைமன்னாரில்  இருந்து இராமேஸ்வரத்திற்கான தரை வழி பாதை அமைப்பது சம்மந்தமாகவும் உரையாடிச் சென்றுள்ளார்.

அவருடைய வருகை அரசியல் ரீதியாக நிறைவேறி இருந்தாலும் மன்னார் மக்களுக்கு எவ்வித பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. காணி விடுவிப்பு குறித்து எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அவ்விடயத்தை வலிமையாக வலியுறுத்தவும் இல்லை. அவர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் போல் ஜனாதிபதியின் நிகழ்வில் ஆசுவாசமாக கலந்து கொண்டு சென்றுள்ளனர்.

மன்னாரில் இனி புதிதாக குடியேறுவதற்கு எவ்வித காணியும் இல்லை.வன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் காடுகளை பாதுகாத்தல், விலங்குகளை பாதுகாத்தல், கரையோரத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சகல இடங்களையும் வர்த்தமானிக்கு உட்படுத்தி, மன்னாரில் மக்கள் குடியேற ஒரு துண்டு நிலம் கூட இல்லாத நிலையில், உத்தரவாதத்தை அரசு மீறி விட்டது ” என சிவகரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments