முல்லையிலிருந்து புதிய பயணம்:இந்திய மீனவருக்கு தடை!



முல்லைத்தீவில் இருந்து  ஒரே குடும்பத்தை சேர்ந்த   ஆறு பேர் இன்று புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று  மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் புறப்பட்டு புதன்கிழமை(5) அதிகாலை இராமேஸ்வரத்தை அவர்கள் சென்றடைந்துள்ளனர். தாய் தந்தை மற்றும் நான்கு பிள்ளைகள் உள்ளடங்களாக 6 பேர் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை சற்று நிறுத்திக் கொள்ளுமாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அத்தோடு, பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கும் தயாராக இருப்பதாகவும் ஆலம் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி தடைக் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழிலை எமது கடற்பரப்பில் நுழைந்து முன்னெடுக்கவுள்ளனர். அத்து மீறிய நடவடிக்கை குறித்து நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற விடயம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், அரசின் நடவடிக்கைக்கு வடபகுதி கடற்றொழிலாளர்களாகிய நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. வடபகுதி கடற்பரப்பில் குறிப்பாக  இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நுழைவதை கட்டுப்படுத்த கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments