போயா தின போராட்டம் ஆரம்பம்!



நாளை போயா தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் வழிபாடுகளை கண்டித்தும் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் பௌர்ணமி தினத்திற்கு முன்னதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

காங்கேசன்துறை வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகில் உள்ள வீதியோரத்தில் போராட்டத்தை முன்னெடுத்த தமிழர்கள் சட்டவிரோத விகாரையை அகற்று,  எமது நிலம் எமக்கு வேண்டும், அமைதியை சீர்குலைக்கும் பொலிஸார் எமக்கு வேண்டாம், போன்ற கோசங்களை எழுப்பினர்.

"காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது.." என இலங்கை இராணுவம்  ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

"கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது" என இராணுவம் கூறுகிறது.

14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


No comments