வலுக்கிறது இந்திய எதிர்ப்பு!
இந்திய மீனவர்களது அத்துமீறல்களிற்கு எதிராக வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மக்கள் போராட்டங்கள் வலுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையம், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை கடற்றொழிலாளர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (05) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளன.
தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றிருந்தனர்.
இதனிடையே இந்திய துணை தூதரகத்திற்கு செல்லும் வழியில் காவல்துறையினர் இடைமறித்து தூதரகம் முன்பாக பேரணியை செல்லவிடாது தடுத்திருந்தனர்.
அதேவேளை பேரணியில் இலங்கை ஜனாதிபதிக்கான மகஜரை வடக்கு மாகாண ஆளுநர் ஊடாகவும், இந்தியப் பிரதமருக்கான மகஜரை இந்தியத் துணைத் தூதுவர் ஊடாகவும் வழங்கவுள்ளதாக ஏற்பாட்டாளரான அன்னராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி முன்னதாக கடலில் இறங்கி கறுப்புக்கொடி சகிதம் போராட்டங்களை மீனவ அமைப்புக்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment