காப்புறுதி பணத்திற்காக பிரித்தானிய பிரஜை பொய் முறைப்பாடு ; கைது செய்ய நடவடிக்கை


தனது நாட்டில் காப்புறுதி பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் . 

பிரித்தானிய பிரஜை ஒருவர் அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம், 2 கைக்கடிகாரங்கள், கமரா உள்ளிட்ட சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்றே போதுமானது எனவும் பொலிசாரிடம் கூறியுள்ளார். 

பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்நிலையில் குறித்த பிரித்தானிய பிரஜை சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments