அமெரிக்கா மற்றும் பிரித்தானியப் போர்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் - ஹவுதி


அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் மீது மேலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏமனின் ஹவுதி போராளிகள் கூறியுள்ளனர்.

யேமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பில் பங்கேற்கும் அனைத்து அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களும் இலக்குகள் என்று இன்று புதன்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஹவுதி போராளிகள் தெரிவித்தனர். 

இந்த அறிக்கையானது பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்கள் மற்றும் உலக வர்த்தகத்தில் அதிகரித்த இடையூறுகள் பற்றிய கவலையைத் தூண்டியது.

யேமனின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹூதிகள், நவம்பர் 19 முதல் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை நடத்தினர். காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதில் தாக்குதல்கள் என்று ஹவுதி அமைப்பு கூறியது.

அமெரிக்கா தலைமையிலான கடற்படைக் கூட்டணியில் செங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் யேமனில் உள்ள ஹூதி இலக்குகளை மீண்டும் தாக்கியுள்ளன.

ஹூதிகள் அண்மையில் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லி மீது ஏவுகணைகளை வீசித் தாக்கினர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க மத்திய கட்டளை தனது படைகள் ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது.

No comments