ஜனாதிபதித் தேர்தலிலுக்கும் அப்பால் விஜேவர்த்தன குடும்ப அரசியலை மீளெழுச்சி காண வைப்பதே ரணிலின் மூல இலக்கு! பனங்காட்டான்


வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டுமென்பதில் ரணில் ஆரம்பத்திலிருந்தே கரிசனையாகவும் சூட்சுமமாகவும் காரியங்களை ஆற்றி வருகிறார். அதேசமயம் அடுத்தடுத்த தேர்தல்களில் தமது தாய்வழி ஷவிஜேவர்த்தன| குடும்ப மீளெழுச்சியை ஏற்படுத்துவதே இவரது மூல இலக்கு. 

2024ம் ஆண்டு என்பது இலங்கையில் தேர்தல் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக தேர்தல்கள் இடம்பெறுமென்று எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது. 

தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் அடுத்தாண்டு அக்டோபர் மாதத்துக்குள் நடைபெற்றாக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை 2025 நடுப்பகுதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். 

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துவரும் மகிந்தவின் பொதுஜன பெரமுனவினர் பொதுத்தேர்தலை 2024ல் நடத்த வேண்டுமென கோரவில்லை, நெருக்கவுமில்லை. ஆனால், தேர்தல் வேலைகளை முன்னெடுக்க ஆயத்தமாகியுள்ளனர். இந்த மாதம் 15ம் திகதி நடைபெறும் பெரமுனவின் முக்கிய கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடக்கூடாது என்று கேட்பவர்களுடன் அரசியல் சித்து விiயாட்டு நடத்தும் நோக்குடன் இரண்டு தேர்தல்களும் 2024ல் நடத்தப்படுமென்று அறிவித்துள்ள ரணில், குட்டையைக் குழப்பியுள்ளார். இதன் வழியாக பேரம் பேசும் யுக்தி ஒன்றை இவர் கையாளுவது தெரிகிறது. 

2024ல் பொதுத்தேர்தல் வேண்டாமென்று பெரமுனகாரர்கள் கேட்பார்களானால் அதற்கான பிரதியுபகாரமாக ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பகிரங்கமாகத் தம்மை ஆதரிக்க வேண்டுமென்று அவர் கேட்பதற்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் ரணிலை தனிமையில் சந்தித்து உரையாடிய பசில் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் பெரமுனவுக்கு அக்கறையில்லை என்று தெரிவித்ததன் ஊடாக, நாடாளுமன்ற தேர்தலை பெரும் சீரியஸாகப் பார்ப்பது தெரியவந்துள்ளது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ரணிலைத் தவிர வேறெவரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடாதென்பதில் பெரமுன மிகவும் ஜாக்கிரதையாக உள்ளது. 

கொழும்பு மையப்படுத்தி வரும் கருத்துக் கணிப்புகள் ஜே.வி.பி.யின் அனுரகுமார திசநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைவிட செல்வாக்குக் கூடியவராக இருப்பதாக தெரிவித்து வருகின்றன. ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் ஏகோபித்த வெற்றியைப் பெறக்கூடியளவுக்கு ஜே.வி.பி. தலைவருக்கான ''காலநிலை'' இல்லையென்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. 

பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளையும் சிதறடித்து, அதன் வழியாக தமது இருப்பை ஸ்திரப்படுத்த ரணில் இதுவரை எடுத்து வந்துள்ள - இப்போது எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் பகிரங்கமானவை. இதுபோன்ற ஒரு முயற்சியில் அண்மையில் சஜித் பிரேமதாசவும் ஈடுபட்டார். 

கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்கி, அதில் ஆதாயம் பெற அவர் எடுத்த முயற்சி இது. விளையாட்டுத்துறை அமைச்சர் றொசான் ரூபசிங்கவை ரணிலுக்கு எதிராக 'விளையாட' வைத்த நிகழ்வு எதிர்பாராதவிதமாக சுழன்று றொசானை வீழ்த்திவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த விளையாட்டுப் பற்றி இந்தப் பத்தியில் எழுதியபோது, 'அவுட்' ஆகப்போவது யார் என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். 

எதிர்பார்த்ததைப் போன்று றொசான் ரூபசிங்க 'அவுட்' ஆகியுள்ளார் அல்லது 'அவுட்' ஆக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமானது பந்து. இது எவர் கையில் இருக்கிறதோ அவரே விளையாட்டின் வெற்றியை அநேகமாக நிர்ணயிப்பவராக இருப்பார். இலங்கையின் அரசியலில் பந்து ரணிலின் கையில்தான் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மூன்று வாரங்களாக ஆட்டத்தை வேகமாக ஓடவிட்ட ரணில் தடாலென றொசானை அமைச்சர் பதவியிலிருந்து வீசி விட்டார். பெரமுனவின் ஆதரவுடனேயே தமது கதிரையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரணில் பெரமுனவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான றொசானை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது சுவாரஸ்யமானது மட்டுமல்ல துணிச்சலானதும்கூட. இது பதவிகளை எதிர்பார்த்து நச்சரித்துக் கொண்டிருக்கும் மற்றைய பெரமுனக்காரர்களுக்கு ஓர் எச்சரிக்கை. 

ரணிலுடன் றொசான் முட்டி மோதிக் கொண்டு மாறி மாறி அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கையில் சில ஊடகங்கள், ''றொசான்தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு எதிரான பொதுவேட்பாளர்" என்று அவரை உசுப்பேத்திக் கொண்டிருந்தன. இந்த வேளையில் ரணிலுக்குத் தெரியாமல் றொசானை அழைத்து சஜித் பிரேமதாச தனிமையில் உரையாடினார். 

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ரணிலுக்கு சாதகமாக அமைந்தன. எதிர்க் கட்சித் தலைவரான சஜித்தை அமைச்சர் பதவி வகிக்கும் தான்  சந்தித்ததற்கான காரணத்தை றொசானால் கூற முடியாத நிலையில், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ரணில் மேற்கொண்ட அமைச்சரவை நியமனங்கள் எல்லாவற்றுக்கும் உச்சமானது. 

றொசானிடம் மூன்று அமைச்சுகள் இருந்தன. அவற்றுள் விளையாட்டுத்துறை, இளையோர் விவகாரம் என்பவற்றை ஹரின் பெர்னான்டோவிடமும், நீர்ப்பாசன அமைச்சை பவித்திரா வன்னியாராச்சியிடமும் கையளித்தார். இவ்விருவர் தெரிவும் மிக நுட்பமான அரசியல் முடிவுகள். 

சஜித் பிரேமதாச அணியிலிருந்து ரணில் பக்கம் தாவி அமைச்சர் பதவி பெற்றவர்களில் ஒருவர் ஹரின் பெர்னான்டோ. இவருக்கு மேலும் இரண்டு அமைச்சுகள் வழங்கப்பட்டது சஜித்துக்கு உஷ்ணத்தை அதிகப்படுத்தியிருக்கும். பவித்திரா வன்னியாராச்சி ராஜபக்சக்களின் அரசியல் செல்லப்பிள்ளை. மகிந்த ஆட்சிக்காலத்திலும் கோதபாய ஆட்சியிலும் தொடர்ச்சியாக அமைச்சர் பதவி வகித்த ஒரேயொரு பெண்மணி. இவருக்கு மேலதிக அமைச்சு வழங்கியது மகிந்த தரப்புக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பது ரணிலுக்கு நன்கு தெரியும். 

இத்தனை காரியங்களையும் நாசூக்காக மேற்கொண்டு வரும் ரணில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டாரெனவும், சர்வதேச ரீதியான பதவி ஒன்றைப் பெற்று ஓய்வு காலத்தைக் கழிக்கப் போகின்றார் என்றும் தெரிவித்து விமல் வீரவன்ச தம்மை கேலிக்கூத்துக்கு உள்ளாக்கியுள்ளார். இதற்கு சுடச்சுட பதிலளித்த ரணில், உரிய நேரத்தில் தமது அறிவிப்பு வருமென கூறியுள்ளதுடன் தாம் போட்டியிடுவதை விமல் வீரவன்ச தீர்மானிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார். 

1977ல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு அமைச்சர் பதவிகளையும், நான்கு தடவைகள் பிரதமராகவும் இருந்தவர் ரணில். இவரது தீராத தாகமாக இருந்தது ஜனாதிபதிப் பதவி. ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த இவர் 2020 ஆகஸ்ட் மாதத் தேர்தலில் தாமும் தோற்று தமது கட்சியையும் முழுமையாகத் தோற்கடித்தார். 

பல மாதங்கள் காத்திருந்து தேசியப்பட்டியலால் கிடைத்த ஒரேயொரு எம்.பி. பதவியை தமதாக்கி நாடாளுமன்றம் புகுந்த இவருக்குக் கிடைத்த அதிர்ஸ்டம் அறகலய. கூரையைப் பிய்த்துக் கொண்டு அதிர்ஸ்டம் கிடைக்கும் என்ற வாக்குக்கு ஒப்பாக பிரதமர் பதவியும் ஜனாதிபதி அந்தஸ்தும் அடுத்தடுத்து இவருக்குக் கிடைத்தன. 

ஜனாதிபதிப் பதவியை மக்களின் நேரடி வாக்குகளால் தேர்தல் ஒன்றின் மூலம் மீளப்பெற்று அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்பதே இவரது விருப்பம். அதற்காகவே இப்பொழுது அத்திவாரமிட்டுக் கொண்டிருக்கிறார். 

2005 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவிடம் தோல்வி கண்டவர் இவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இத்தேர்தலை புறக்கணித்ததாலேயே ரணில் தோல்வியுற்றார் என்பது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னர் 2010, 2015 ஜனாதிபதித் தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை. 

மாறாக, ராஜபக்சக்களின் அரசியல் பலத்தை உடைக்க வேண்டுமென்ற முனைப்பே இவரிடமிருந்தது. இதற்கான மறைமுக நடவடிக்கையாக மகிந்த தரப்பிலிருந்தவர்களை தம் பக்கம் இழுத்து அவர்களூடாக பொறி வைத்தார். யுத்த கால போர்த்தளபதியாகவிருந்து, பின்னர் ராஜபக்சக்களின் பரம விரோதியாக மாறிய சரத் பொன்சேகாவை 2010 தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கினார். பொன்சேகா வெற்றி பெறவில்லையாயினும் ராஜபக்சக்களை சிறிது ஆட்டங்காண வைத்தது இத்தேர்தல். 

2015ல் ராஜபக்சக்களின் மூத்த அமைச்சராகவிருந்த மைத்திரிபால சிறிசேனவை சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவோடு வெளியே இழுத்து ஐக்கிய முன்னணியின் பொதுவேட்பாளராக நிறுத்தி மகிந்தவை தோற்கடித்தவர் இவரே. இதன் தொடர்ச்சியாகவே அறகலயவின் திரைக்குப் பின்னாலான இவரின் செயற்பாடுகளும் கிடைத்த பதவிகளும். 

இன்றுள்ள அரசியல் சூழ்நிலை ராஜபக்சக்களுக்கு ரணிலை எதிர்க்கவோ ஒதுக்கவோ முடியாதுள்ளது. தங்களின் இளவரசராக நினைக்கும் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் பக்குவம் (வயது) வரும்வரை - அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்களுக்கு பங்கம் ஏற்படுத்தாது பார்த்துக் கொள்ளக்கூடிய ஒருவரை ஜனாதிபதிக் கதிரையில் வைத்திருப்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

அந்த நம்பிக்கையை ஊட்டக்கூடியதாக தமது நகர்வுகளை நெளிவு சுழிவாக முன்னெடுத்து வரும் ரணில், பெரமுனவின் அனைத்து விருப்புகளையும் (அமைச்சுப் பதவிகள்) நிறைவேற்றக்கூடியவர் அல்ல என்பதையும் செயலில் காட்டி வருகிறார். றொசானின் பதவி பறிப்பும் இரு வேறு தரப்பினருக்கு அவரின் அமைச்சுகளை பங்களித்தமையும் செயல் வடிவிலான இவரது எடுத்துக்காட்டு. 

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் தமது தாய்மாமன் (ரைம்ஸ் பத்திரிகை நிறுவன அதிபர் றஞ்சித் விஜேவர்த்தன) மகனான றுவான் விஜேவர்த்தனவை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக்கி, மாவட்ட அடிப்படையில் கட்சியைப் புனரமைக்கும் பணிகளை ஒப்படைத்து, தமது விசேட ஆலோசகர்களில் ஒருவராக அமர்த்தி, தமது வெளிநாட்டுப் பயணங்களின் போதெல்லாம் அவரையும் அழைத்துச் செல்லும் பின்னணியை மறைத்துவிட முடியாது. 

ஜே.ஆரிடம் கற்றவைகளையும் பெற்றவைகளையும் அமைதியாக ரணில் விதைத்து வருகிறாரென்று சொல்லலாமா?


No comments