தொடரும் அடை மழை!




சீரற்ற காலநிலை காரணமாக வடபுலத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களை சேர்ந்த 181 நபர்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 9 குடும்பங்களை சேர்ந்த 36 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் கூடிய அளவாக 175 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், நெடுந்தீவில் 2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அக்கராயனில் 128 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக பிரதீபன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments