வரவு செலவு தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்! ஜனாதிபதி தேர்தல் காலம் ஆகும்! பனங்காட்டான்


யானை பலமான மிருகம். இதற்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கீழே விழுந்தால் இதனால் தானாக எழும்ப முடியாது. நான்கு பேர் சேர்ந்தால்தான் இதனை தூக்கிவிட முடியும். நன்றியற்ற இந்த யானை தனது இருப்பைத் தக்க வைப்பதற்காக தன்னைத் தூக்கி விட்டவர்களையே துவம்சம் செய்யத் தயங்காது. அரசியலும் இதுதான்

வராது ஆனால் வரும், வரும் ஆனால் வராது என்று சொல்லப்பட்டு வந்த சீன சமுத்திர ஆராய்ச்சிக் கப்பல் எப்படியோ வந்தது. ~p யென் என்ற இக்கப்பல் இந்தியாவின் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக் கடலுக்குள் புகுந்ததுதான் அதன் வல்லமை. 

சமுத்திர ஆராய்ச்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுச் செயற்பாடுகளுக்கு பயன்படுமென்று சீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

எதற்கு அது பயன்படும் என்பதுவே இந்திய அரசை நிமிர வைக்கும் கேள்வி. இந்தக் கப்பலின் ஆய்வு நோக்கம் என்னவென்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தெரியாததல்ல. இக்கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தார். முக்கிய மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதே இதன் நோக்கம். ஆனால், வேறு சில விடயங்களையும் அவர் ராஜரீக முறையில் கையாண்டதாக இந்திய முன்னணி ஊடகமொன்று தெரிவித்திருந்தது. 

அடுத்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மாதம் முதல் வாரத்தில் கொழும்புக்கு விஜயம் செய்வதாக இருந்தது. அமைச்சர் ஜெய்சங்கர் காரணம் கூறாமலே திடுதிப்பென இலங்கையை விட்டுப் புறப்பட்டதுபோல அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கொழும்பு விஜயமும் காரணம் கூறாமலே ரத்துச் செய்யப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் விஜயம் அமைந்தது. திருமலை விஜயம், யாழ்ப்பாண விஜயம் என்பவைகளுடன் கொழும்பில் இடம்பெற்ற ஷமலையகம் 200| பெருநிகழ்வில் கலந்து கொள்வது பிரதானமானதாக இவ்விஜயத்தில் அமைந்தது. 

மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரத்தை பல கோடி ரூபாவில் புனரமைப்புச் செய்தது இந்தியா. இந்தியாவின் ஆதீனமொன்றின் நிரந்தர இருக்கையும் இங்கு உறுதி செய்யப்பட்டது. 

1968ம் ஆண்டு திருமலை கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்க புனித நகராகப் பிரகடனம் செய்தார். உள்;ராட்சி அமைச்சராகவிருந்த மு.திருச்செல்வத்தை புறக்கணித்து தம்மி~;டப்படி டட்லி சேனநாயக்க பிரகடனம் செய்ததன் விளைவாக தமிழரசுக் கட்சியைச் சார்ந்த திருச்செல்வம் அமைச்சர் பதவியை துறந்தது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னைய வரலாறு. 

கோணேஸ்வர ஆலயப் பகுதியை சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றியமைக்க இப்போது தொல்பொருள் திணைக்களம் முயன்று வருவதும், இரத்தினபுரியைச் சேர்ந்த சுமார் ஐம்பது சிங்கள வணிகர்களை இங்கு அனுமதியின்றி வியாபாரம் செய்ய அனுமதித்திருப்பதும் தொடரும் வேளையில் இங்கு விஜயம் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோணேஸ்வர ஆலயத்தை புனரமைத்து கருங்கல்லால் நிர்மாணிக்க இந்திய அரசு உதவுமெனக் கூறியிருப்பது சிங்கள அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். 

அதேசமயம் திருமலையிலும் யாழ்ப்பாணத்திலும் ஸ்டேட் பாங்க் ஒவ் இந்தியா வங்கிக் கிளைகளையும் அமைச்சர் திறந்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் ராஜதந்திரிகளும் இலங்கை அரசின் நினைவழிப்புச் சின்னமாக அமைந்திருக்கும் ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொதுநூலகத்தைத் தரிசித்துச் செல்வது வழக்கம். சாம்பரிலிருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை போன்ற யாழ்.பொதுநூலகம் யாழ்ப்பாணத்தின் அடையாளமாக இருந்து வருகிறது.  

நூலக எரிப்புக் கட்சியின் அடையாளமாக இருப்பவர் ரணில் விக்கிரமசிங்க. அமெரிக்கா, இந்தியா, சீனா என்ற எந்த ஒரு நாட்டுக்கும் இலங்கை சார்ந்து செல்லாது என்று அண்மையில் இவர் கூறியதை நிரூபிக்கும் வகையில் சீனக்கப்பலை அடுத்து இந்திய அமைச்சரின் வருகையை பார்க்க முடிகிறது. 

இதன் இன்னொரு பக்கமாக அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மகாநாடு அமைந்தது. தங்கள் கட்சியின் பலத்தை ஆள்தொகையால் எடுத்துக்காட்ட இதன் தலைவர்கள் முனைந்து வெற்றி கண்டனர். கடந்த பொதுத் தேர்தலில் கூண்டோடு சரிந்து வீழ்ந்த இக்கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, தேசியப் பட்டியல் எம்.பி.யானதால், கட்சிக்கு நாடாளுமன்றில் ஓர் ஆசனம் கிடைத்தது. 

மக்கள் பேரெழுச்சியால் கோதபாயவும் அவரது சகோதரர்களும், அவர்களின் பிள்ளைகளும் பதவிகளைத் துறந்ததும், எவருமே ஏற்க மறுத்த பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக் கொண்டதும், அதன் வழியாக ஜனாதிபதியானதும் கடந்த வருடத்தின் முக்கிய அரசியல் நிகழ்வு. 

கட்சியின் மாநாடு சுகததாஸ அரங்கில் இடம்பெற்றபோது, இதன் முக்கியஸ்தர்களில் ஒருவரான அகில வஜிர காரியவாசம் யானைக்கதை (யானையே ஐக்கிய தேசிய கட்சியின் சின்னம்) ஒன்றைக் கூறி ஆதரவாளர்களை கவர்ந்திழுக்க முயன்றார். 

'விழுந்த யானை தானாக எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளது. இதனை எவராலும் தடுக்க முடியாது" என்பது இவரின் உரை. 

இங்கு குறிப்பிடப்பட்ட இரண்டு சொற்கள், ''தானாக எழுந்து'' என்பதும், ''இனித்தடுக்கவே முடியாது'' என்பதும் கேள்விக்குரியவை. 

அகில வஜிர காரியவாசம் சொன்ன இதே கதையின் மூலம் வேறானது.  'மிருகங்களில் பலமானது யானை. ஆனால் அது வீழ்ந்தால் தானாக எழும்ப முடியாது. நான்கு பேர் தூக்கி விட்டால்தான் விழுந்த யானையால் எழும்ப முடியும்...." என்று இத்தொடர் நீள்கிறது. 

இந்த மூலக்கதையே ஐக்கிய தேசிய கட்சிக்கு மிகப்பொருத்தமானது. விழுந்த யானையை (ஐக்கிய தேசிய கட்சி) கோதபாயவும், ராஜபக்சக்களும்தான் தூக்கி விட்டனர். இப்போதும் அந்த யானை அவர்களின் ஆதரவில்தான் நடமாடுகிறது. வருங்காலத்தில் வேறு கூட்டத்துடன் சேர்ந்து இயங்க முயல்கிறது. ஆனால் இதனால் ஒருபொழுதும் தனியாக நடக்க முடியாது. அதற்கான கூட்டை உருவாக்குவதற்காக மற்றைய கட்சிகளை பிளவுபடுத்தி வருகிறது என்பதே யதார்த்தம். 

இதன் படிமுறையாகவே ஒவ்வொரு கட்சியாக (தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட) தனது பலத்தை இது பிரயோகித்து வருகிறது. இப்போது ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவில் எஞ்சி இருப்பவர்களையும் பிரித்தெடுக்கும் முயற்சியில் அதற்குள்ளிருந்தே ஒருவரை தெரிந்தெடுத்து செயற்படுத்தி வருகிறது. அமைச்சரவை நியமனங்களின்போது பெரமுனவில் இல்லாதவர்களுக்கு இடமளிப்பதுகூட அதே யுக்திதான். 

உள்ளூராட்சி தேர்தல்களை ரத்துச் செய்தவர், மாகாண சபை தேர்தல்களை மறுத்து வருபவர் ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் வைத்து அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் எனவும், அதற்கடுத்து நாடாளுமன்ற தேர்தல் எனவும் ஜனநாயக தேர்தல்களை முன்னறிவித்தார். 2025ல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தல்கள் என்றும் அறிவித்துள்ளார். 

இவரது அறிவிப்பை நம்பிய பல கட்சிகளும் அபேட்சகர் தெரிவு, தேர்தல் கூட்டு என்று அலைய ஆரம்பித்துள்ளன. பெரமுனகாரர்களுக்கு போதிய அமைச்சுப் பதவிகள் வழங்காதுவிட்டால் இந்த மாதம் 14ம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தை தாம் ஆதரிக்கப் போவதில்லையென பெரமுனவின் சிலர் அறிவிப்புக் கொடுத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பெரமுனவினர் ரணிலிடம் கோரப் போவதாகவும் செய்திகள் சொல்கின்றன. 

இவை எதுவுமே ரணிலை அசையச் செய்யாது. அவர் சொன்னதுபோல ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என்பதுகூட சந்தேகத்துக்குரியது. கட்சிகளை திசை திருப்பி அல்லாட வைப்பதற்காகவே தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

பெரமுனவினர் சொல்வதுபோல வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்காது அது தோற்கடிக்கப்படுமானால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்படும். இடைக்காலத்துக்கு தமக்கு விருப்பமான ஓர் அமைச்சரவையை ஜனாதிபதி நியமிக்க சட்டத்தில் இடமுண்டு.  ஆனால், ஜனாதிபதிப் பதவியில் மாற்றம் இருக்காது. 

அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறுமென்று எவராலும் கூறமுடியாது. அந்தத் தேர்தலில் இப்போதுள்ள எம்.பிக்களில் எத்தனை பேர் வெற்றி பெறுவர் என்றும் நம்பிக்கையாகச் சொல்ல முடியாது. வரவு செலவுத் திட்டம் நிறைவேறுமானால் ரணில் நினைப்பவையே தொடர்ந்து இடம்பெறும். எனவே எதுதான் நடைபெற்றாலும் ரணிலுக்கு ஒன்றுதான். அது அவருக்கான வெற்றியானது. 

எதிர்ப்பவர்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்ட யானை தயாராகிறது. விழுந்து கிடந்த தன்னை தூக்கி விட்ட பெரமுனவை பதம் பார்க்க அது ஆரம்பித்துள்ளது. வெற்றியும் தோல்வியும் ரணிலுக்கு ஒன்றே. அவர் பதவிக்கு உடனடியாக ஆபத்தில்லை. சூழ்ச்சி அரசியல் என்பது இதுதான். 

No comments