சீன மீன் வடக்கு வராது!



சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது, விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது" என இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்திருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தஇலங்கைக்கான சீன தூதுவர் “பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரத்தை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது, சீனா எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது.  அதில் 5 மில்லியன் உணவு பொருட்களாகவும், 5 மில்லியன் கடற்தொழிலாளர்களுக்காகவும், 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன்” எனவும் சீன தூதர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே வடக்கு மீனவர்களை இலக்கு வைத்து சீன தூதரக நகர்வு கவனத்தை ஈர்த்துள்ளது.அதிலும் தமிழகத்தை அண்மித்த நெடுந்தீவு மீனவர்களை இலக்கு வைத்து உதவிகளை அள்ளிவீசுகின்றமை பேசுபொருளாகியுள்ளது.


No comments