ஈஸ்டர் தாக்குதல் சனல்-4 ஆவணம் ரணிலுக்கு பாலில் விழுந்த பழமாகுமா? பனங்காட்டான்


ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வேளையில் முள்ளிவாய்க்கால் பேரினப் படுகொலைக்கு பொறுப்புக் கூறும் தீர்மானம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படலாம். இந்த நேரத்தில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் சனல்-4 ஆவணம் ராஜபக்சக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். இதனையிட்டு ரணில் உள்;ர மகிழவும், தமது வருங்கால அரசியல் வெற்றிக்கான காய்களை லாவகமாக நகர்த்தவும் வாய்ப்பு அதிகமாகும். 

2009 முள்ளிவாய்க்கால் பேரினப்படுகொலை அல்லது இனசங்காரத்தையடுத்து, இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தம்வயப்படுத்திய ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் அடுத்த ஏற்பாடு என்னவென்பது இந்த வாரம் (செப்டம்பர் 11) ஆரம்பமாகும் அதன் கூட்டத்தொடரில் தெரியவரலாம். 

2009 மே மாதம் அப்போதைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு, முள்ளிவாய்க்காலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையின் உத்தரவாதங்கள் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

மனித உரிமைப் பேரவையின் ஆணையாளராகவிருந்த நவநீதம் பிள்ளை முன்னெடுத்த முயற்சிகள் தீர்மானமாக வடிவெடுத்து ஒரு தசாப்தமாகி விட்டது. அதன் பின்னர் வந்த ஆணையாளர்களும் - முக்கியமாக மிச்சேல் பச்சிலற் அம்மையார் மேற்கொண்ட நீதி தேடும் முயற்சி சர்வதேச நீதிப்பொறிமுறையையும், பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தியது. அதற்கான மேலதிக ஆதாரங்களைத் தேடும் பணிக்கென தனி அலுவலகத்தையும் இது நிறுவியது. 

2015ல் ரணிலும் மைத்திரியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு, அப்போது ஜெனிவாவில் அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கி நம்பமுடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனை ரணில் தலைமையிலான நிகழ்கால அரசு பின்வாங்கியது தனி வரலாறு. 

ஜெனிவாவின் 46ம் 51ம் அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வலுவானவை. இலங்கை அரசை பொறுப்புக்கூறலுக்கும், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறைக்கும் இது தள்ளியதால் இதனை இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் என்று கூறி சிங்கள பௌத்த இனவாதிகளை ஜெனிவாவுக்கு எதிராக திசை திருப்பி வந்தன இலங்கை அரசுகள். 

கடந்த வருட செப்டம்பர் மாத ஜெனிவா அமர்வின்போது மனித உரிமைப் பேரவை முன்மொழிந்த பரிந்துரைகள் இலங்கை அரசை நெருக்கடிக்குள் தள்ளியதாயினும் அதனை அவ்வாறானதாக அரசு வெளிக்காட்ட விரும்பவில்லை. 

முக்கியமாக, பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெனிவா கூறியது. சம்பந்தப்பட்டவர்கள் எவரென பெயர்குறிப்பிடப்படவில்லையாயினும், ராஜபக்சக்களையும் அவர்களுடன் இணைந்து இயங்கிய அதிகாரிகளையும் (படைத்தரப்பு உட்பட) ஜெனிவா சுட்டியதென்பது ரகசியமன்று. 

சிவிலியன் துறைகளில் ராணுவத்தின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவ பிரசன்னத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. ராணுவ வசமுள்ள அனைத்து தனியார் காணிகளையும் மீளளித்து, மதத் தலங்களை நிர்மாணித்தல் பற்றிய உரையாடல்கள் நடத்தி நிலப்பூசல் பாரபட்சமின்றித் தீர்க்கப்பட வேண்டுமெனவும் கூறியது. 

மதத்தலங்கள் என்று பொதுப்படையாக இங்கு குறிப்பிடப்பட்டதாயினும், அப்போது வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை ஆகிய தமிழரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வந்த அடாவடி நடவடிக்கைகளையே இது குறிகாட்டியது. 

சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை விசாரணை செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் தேசிய அதிகார வரம்புகளின் நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாகவும், உலகளாவிய அதிகார வரம்புகளின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் கீழும் அதற்குரிய சர்வதேச வலையமைப்புகளினூடாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜெனிவா வேண்டியது.

இந்த வாரம் ஆரம்பமாகும் கூட்டத்தொடரில் முற்கூட்டிய அறிக்கையிலும் மனித உரிமைப் பேரவை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. 'நல்லிணக்க முன்னெடுப்புகளை மேற்கொள்வதில் ஜனாதிபதி வேறுபட்ட தொனியை வெளிப்படுத்துவதாகவும், தொல்பொருள் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக காணி சுவீகரிப்பை நிறுத்துவதாக அறிவித்திருப்பதும் உள்நாட்டில் மோதல்களுக்கான பதற்றங்கள் அதிகரிப்பதற்கு ஆதாரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, வடக்கு மற்றும் கிழக்கில் காணி தொடர்பான சர்ச்சைகள் தொடர்பில் மனித உரிமைகள் அலுவலகத்துக்கு தொடர்ந்தும் அறிக்கைகள் கிடைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. 

மனிதாபிமான சட்டமீறல்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பயணத்தடை மற்றும் சொத்து முடக்கங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று உறுப்பு நாடுகளிடம் பேரவை விடுத்த வேண்டுகோள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இதன் அடிப்படையில் ராணுவத்தளபதி சவேந்திர சில்வா உட்ப படைத்துறையைச் சேர்ந்த சிலருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது. முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச ஆகியோருடன் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு கனடிய அரசு தடை விதித்ததோடு கனடாவுக்குள் அவர்களுக்கு ஏதாவது சொத்துகள் இருப்பின் அவற்றை முடக்கும் உத்தரவையும் விடுத்தது. 

ஜெனிவா தீர்மானத்தின் முன்மொழிவாளர்கள் என்ற வகையில் அமெரிக்காவும் கனடாவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டன. இத்தீர்மானத்தின் அடிப்படையில்தான் இலங்கையிலுள்ள கனடியத் தூதுவர் தமிழர் பிரதேசங்களுக்கு அண்மையில் சென்று பல தரப்பினரையும் சந்தித்து தகவல்களைப் பெற்றதுடன், தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்புக்குட்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களையும் சென்று பார்வையிட்டார். 

ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரமே கனடியத் தூதுவர் தமது பணிகளைப் புரிந்தாரென்பதை புரியும் அறிவற்ற சில சிங்கள அரசியல்வாதிகள் தமது மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கனடியத் தூதுவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு பிதற்றி தம்மைத் தாமே சிறுமைப்படுத்திக் கொண்டனர். 

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற மூன்று மாதங்களின் பின்னர் - கடந்த வருட செப்டம்பர் மாத அமர்வின்போது ஜெனிவா விடுத்த அறிக்கையில் இன்னுமொரு முக்கிய அம்சம் உண்டு. 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பானது இது. இத்தாக்குதலில் பல குழந்தைகள் உட்பட சுமார் 250 பேர்வரை கொல்லப்பட்டனர். இவர்களுள் ஏழு பிரித்தானிய பிரஜைகளும் 43 வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் அடங்குவர். 

இந்தத் தாக்குதல் படுகொலைகள் சம்பந்தமான நீதியான விசாரணை சந்தேகத்துக்கிடமின்றி இடம்பெறவில்லை. கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது விசாரணைக் குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கையைப் பெற்றாராயினும், அதனைப் பகிரங்கப்படுத்தாது குளிரூட்டிக்குள் தள்ளிவிட்டார். 

மாறாக, தாக்குதலின் உண்மையைக் கண்டறிய முனைந்த மூத்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் திட்டமிடப்பட்டு வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இவற்றுக்கு எதிர்ப்புறமாக ஜெனிவாவின் அறிக்கை இதுபற்றிக் குறிப்பிட்ட வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது:

'உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான முன்னைய விசாரணைகளின் முழுமையான கண்டுபிடிப்புகளைத் தவிர்த்து சர்வதேச உதவியுடன் தொடர்ச்சியான சுயாதீனமான வெளிப்படையான விசாரணையை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழுப்பங்களிப்பையும் உள்ளடக்கி நிறுவுதல்" என்று இந்தக் கோரிக்கை அமைந்திருந்தது. எனினும், ஒரு வருடமாகியும் ரணில் விக்கிரமசிங்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. 

ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவின் ஆதரவை தம்முடன் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் நோக்கத்துடன், அவர்களைக் காப்பாற்றுவதற்காக இது தொடர்பான விசாரணையை நடத்த ரணில் விரும்பாது இருந்திருக்கலாம். அல்லது, இவ்விவகாரத்தில் தாம் தொடர்ந்து மௌனம் காப்பதன் வாயிலாக சர்வதேச விசாரணைக்குள் ராஜபக்சக்களை தள்ளி விடலாமென்ற குள்ளநரி தந்திர யுக்தியாகவும் இவ்வாறு அவர் நடந்து கொண்டிருக்கலாம். 

முள்ளிவாய்க்கால் பொறுப்புக்கூறல், அதற்கான சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை என்னும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ராஜபக்சக்களை ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்குள்ளும் தள்ளிவி;ட்டால் அவர்கள் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது போகும் நிலை உருவாகுமானால் அது தமது அரசியல் எதிர்காலத்துக்கு - முக்கியமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது வெற்றிக்கான போனஸ் ஆக அமையுமென ரணில் எண்ணக்கூடும். 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத சூழ்நிலை இப்போது காணப்படுகிறது. அதேசமயம் ராஜபக்ச குடும்பத்தின் மிக இளையவரான நாமல் ராஜபக்சவை ரணிலுக்குப் போட்டியாக்க சிலர் முனையும் இவ்வேளையில், ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்சக்களை குப்புற வீழ்த்துமானால், அதையும் தமக்கு சாதகமாக்க ரணில் நினைக்கிறாரென்றால் சனல்-4 ஆவணத்தை அவர் உளமார விரும்புவார். 

வேண்டுமானால் இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு அவர் சம்மதித்தாலும் ஆச்சரியப்பட நேராது. இது தொடர்பான சர்வதேச சுயாதீன வெளிப்படையான விசாரணை ரணிலின் எதிர்காலத்துக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

வெளியாகியிருக்கும் சனல்-4 ஆவணம் ராஜபக்சக்களை நோக்கி ஏவப்பட்டிருக்கும் பாணம். இது தொடர்பான விசாரணை ராஜபக்சக்களை எழும்ப முடியாது அடித்து வீழ்த்துமென்றால், அது ரணிலுக்கு பாலில் விழுந்த பழம் போலாகும். இதனை எவ்வாறு அவர் கையாளப்போகிறார் என்பதிலேயே ராஜபக்சக்களின் எதிர்காலம் மட்டுமன்றி அவரின் எதிர்காலமும் தங்கியுள்ளது. 

No comments