சிவாஜிக்கு ஒருவாறு பிணை!திலீபனுக்கு நினைவேந்தல் செய்தமைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபனுக்கு நினைவேந்தலை ஏற்பாடு செய்தமை மற்றும் அதில் பங்குகேற்றமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று அவர் முன்னிலையானபோதே குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவு நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பில் அவர் மீது சட்ட மாஅதிபரால் 2022 ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


2011 ஆகஸ்ட் 29ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்வதாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தலை ஏற்பாடு செய்ததன் மூலம் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகளை மீறியதாக சட்ட மாஅதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.


இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட 7 தவணைகளில் சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதுடன் அவ்வேளைகளில் அவர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.


இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தார்.


அதனையடுத்து, நேற்று சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜரானார்.


தமது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றதாக சட்டத்தரணிகள் நேற்று மன்றில் தெரிவித்தனர்.


சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும், அவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின்படி, பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


முன்வைக்கப்பட்ட அனைத்தையும் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்

சிவாஜிலிங்கத்தை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments