திலீபன் ஊர்தி உடைப்பு: முறைப்பாட்டை அடுத்து அறுவர் கைது!

 


தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு இலங்கை காவல்துறையால் தாக்கல் செய்த தடை விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா நீதிமன்றம்   குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவு பிறத்துள்ளது.  

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் ''திலீபன் வழியில் வருகின்றோம்'' என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்தது.

ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என வவுனியா காவல்துறையில் இருவர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டுக்கு அமைய ஊர்திப் பவனிக்கு காவல்துறையினர் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.

இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இதனிடையே திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பின்னர் வாகனத் தொடரணி தம்பலகமுவவை நோக்கி திரும்பிச் சென்றதுடன்  செல்வராசா கஜேந்திரன் தொலைபேசி ஊடாக, காவல்துறை அதிபரிடம்  முறைப்பாடு செய்திருந்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திருகோணமலை விஜேசேகரவை வசிப்பிடமாகவும் மற்றையவர் சர்தாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.

மற்றைய இருவரும் மணயவெளி மற்றும் சுமேதங்கரபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.


No comments