சொத்தை பறிக்கவேண்டும்: 4ம் மாடி போகவேண்டும்!



இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையானின்) சொத்துக்கள் விபரங்கள் குறித்து ஆராய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரிகளை சனல் 4-ன் ஆவணப்படம் மிக தெளிவாக அடையாளப்படுத்தியதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எனக்கூறி மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது எனவும் சுரேஸ்; குறிப்பிட்டுள்ளார்.

ஊழல், இலஞ்சம், கொலைகள், கொள்ளைகள், கடத்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை சிவநேசதுரை சந்திரகாந்தன் வைத்திருக்கின்றார் என பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே அவ்வாறாக சேகரித்த அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவரால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொடுக்க வேண்டுமெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வலியுறுத்தியுளளார்.

இதனிடையே இராஜாங்க அமைச்சர் சி சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னதாக ''ஒரு கொலைகாரன்'' என முகநூலில் பதிவுகளையிட்ட சிலர் நான்காம் மாடிக்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சனல் 4இன் காணொளியில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக சி.சந்திரகாந்தனுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டிப்பதாகவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments