7 வயது மாணவிக்கு HIV ; 08 மாதங்களுக்கு முன் ஆசிரியரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்!




இலங்கையின் தென் பகுதியில் ஆசிரியர் ஒருவரால் 7 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சுமார் 8 மாதங்களின் பின்னர் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 7 வயது மாணவி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பரிசோதனைகளில் தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. 

 (தனிநபர் தகவல் பாதுகாப்பு நலன் கருதி பாடசாலையின் பெயர் , பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகநபரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை). 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்பதோடு , அவரது மனைவி பாலர் பாடசாலை ஆசிரியையாவார். 

சந்தேகநபர் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதோடு , அவரது மனைவி முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்பினை நடத்துகின்றார். இவர்கள் இருவர் தமது வீட்டிலேயே மேலதிக வகுப்புக்களை நடத்தியுள்ளனர். கணவன் வீட்டிற்குள் காணப்படும் அறையொன்றிலும் , மனைவி வீட்டிற்கு வெளியிலும் வகுப்புக்களை நடத்தியுள்ளனர். இவ்வாறானதொரு சூழலிலேயே சிறுமி குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் ரீதியான மாற்றங்களை அவதானித்த அவரது தாயார் , சிறுமியை மருத்துவ சிகிச்சைக்க்காக அழைத்து சென்ற போதே தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமையை அறிந்து கொண்டுள்ளார். இது தொடர்பில் சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் முன்வரவில்லை. காரணம் சமூகம் தொடர்பான அச்சமும் , அதனால் ஏற்படக் கூடிய அவமானமும் அவர்களை முற்போக்காக சிந்திக்க இடமளிக்கவில்லை. 

இதனால் அந்த பெற்றோர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பிரிதொரு பிரதேசத்தில் குடியமர்ந்ததோடு , அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையில் தனது மகளை சேர்த்துள்ளனர். குறித்த சிறுமியை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ள போதிலும் , அவர்கள் மகளின் எதிர்காலம் கருதி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரியவருகிறது. 

எவ்வாறிருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த சிறுமி சுகயீனமடைந்ததையடுத்து , அவரது தாயார் அவரை அருகிலுள்ள ஆதார வைத்தியசாலையொன்று அழைத்துச் சென்றுள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி எயிட்ஸ் (எச்.ஐ.வி.) தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் பெற்றோரிடம் மேலதிக தகவல்களைக் கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். 

வைத்தியர்களின் முறைப்பாட்டுக்கமைய கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்ட வழக்கினை தொடர்ந்து சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டு , எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments