யாழில் கஞ்சா கடத்தல் குற்றத்தில் கைதானவர்களிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விசாரணை


யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சாவுடன் கைதான இருவரை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி எடுத்துள்ளனர். 

பொன்னாலை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 227 கிலோ 915 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஊர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு , வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரை 07 நாட்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர். 

அதேவேளை காங்கேசன் துறை கடற்பரப்பில் கடற்படையினரால் , 54 கிலோ 300 கிராம் கஞ்சாவுடன் கைதான நபர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , 03 நாட்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர். 

கடந்த காலங்களில் கஞ்சாவுடன் கைதாகும் நபர்களை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து 24 மணி நேரத்திற்குள் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி விடுவார்கள்.

இந்நிலையில் குறித்த இரு சம்பவங்கள் தொடர்பில் , கைதானவர்களுக்கு பின்னால் இயங்கும் வலையமைப்பு தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாகவே , பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடன் அவர்களை 24 மணி நேரம் கடந்தும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments