நல்லூரில் 35 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை


நல்லூர் ஆலய சூழலில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடுமையான எச்சரிக்கை விடுத்து , அந்த பைகளை கடைகளில் இருந்து அகற்ற பணித்தனர். 

இது தொடர்பில் யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரி தெரிவிக்கையில், 

20 மைக்ரோன் தடுப்புக்கு குறைந்த பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. அதேவேளை லஞ் சீற்றுக்கள் 100 வீதம் உக்கும் தன்மையுடையதாக காணப்பட வேண்டும். அவற்றினை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். 

யாழ்.மாவட்டத்தில் கடந்த 08 மாத கால பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நல்லூர் மகோற்சவ காலங்களில் ஆலய சூழலில், கச்சான் கடைகள் , இனிப்பு கடைகள் , காரம் சுண்டல் கடைகள் என  பெருமளவான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனைகள் அதிகளவில் காணப்பட்டமையால் அவர்களுக்கு முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் பொலித்தீன்களை பாவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். 

அதேவேளை , ஆலயத்திற்கு பூக்கள் , அருச்சனை பொருட்களை பக்தர்கள் கொண்டு வரும் போது , அவற்றினை பொலித்தீன் பைகளில் கொண்டு வருகின்றனர். 

அவ்வாறானவர்களுக்கு பாடசாலைகளில் சுற்றாடல் முன்னோடிக்குழு மாணவர்கள் , ஆசிரியர்கள் , மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் ஆகியோர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி , பொலித்தீன் பைகளை பெற்றுக்கொண்டு அவற்றுக்கு மாற்றீடாக துணிப்பைகளை வழங்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார். 

No comments