விக்கியின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.  ஊடகத்துறையில் தனது ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வினை உள்ளடக்கி பி. விக்னேஸ்வரன் இந்நூலினை உருவாக்கியுள்ளார். 

இலங்கையில் அவர் ஆற்றிய கலைப் பணிகள், வானொலியில் தயாரிப்பாளராக, செய்தி வாசிப்பாளராக ஆற்றிய பணிகள், தொலைக்காட்சித் துறையில் தயாரிப்பாளராக, பணிப்பாளராக பல்வகைமைச் சூழலில் அவருக்கிருந்த வாய்ப்புக்கள், எதிர்கொள்ளப்பட்ட சவால்கள், புலம்பெயர் நாட்டில் ஊடகப் பணிகள் எனப் பலதரப்பட்ட விடயதானங்களை ஒன்றிணைத்து ஊடகத்துறைசார் ஆவணமாக, ஆயிரம் பக்கங்களுக்கு அண்மித்ததாக இந்நூலினை பி.விக்னேஸ்வரன் தந்துள்ளார்.  

ரொரன்ரோ ‘தாய்வீடு’ மாத இதழில் ஆறு ஆண்டுகளாக வெளிவந்த தொடரின் நூல் வடிவமாக இப்படைப்பாக்கம் விளங்குகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  

நிகழ்வுக்கான தலைமையுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும், வரவேற்புரையினை ஊடகக்கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனும், நூலிற்கான வாழ்த்துரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னைநாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கனமும், அறிமுகவுரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தாவும் நிகழ்த்தினர். 

அதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டு வைபவம் இடம்பெற்றதுடன் முதற்பிரதியை பி. விக்னேஸ்வரன் வழங்க ஐ.பி.சி.தமிழ் நிறுவன உரிமையாளர் க.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். முதற்பிரதியை தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கலும் நடைபெற்றது. சில பாடசாலைகளுக்கு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நூலிற்கான ஆய்வுரையினை அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், நயப்புரையினை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் முன்னைநாள் பணிப்பாளர் எஸ்.விஸ்வநாதனும் வழங்கினர். ஏற்புரையினை நூலாசிரியர் பி. விக்னேஸ்வரன் ஆற்றினார். நன்றியுரையினை ஊடகக் கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் டினேஸ் கொடுதோர் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஊடகத்துறை சார்ந்தோர்,பல்கலைக்கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments