சம்பந்தனுக்கு வந்தது பொல்லாத கோபம்! ரணிலுக்கு எச்சரிக்கை; குகதாசனுக்கு கல்தா! பனங்காட்டான்


தமிழரசின் மூத்த தலைவர் சம்பந்தன் நீண்ட துயில் நீங்கி எழுந்துவிட்டார். இது அவரது கோப காலம் போலும். தொடர்ந்து தமிழரை ஏமாற்ற வேண்டாமென்று ரணிலை எச்சரித்துள்ளார். திருமலை மாவட்டத்தில் தமது வலதுகரமாக இயங்கிய கனடா குகதாசனுக்கு கல்தா கொடுத்துள்ளார். எய்தவன் இருக்க அம்பை மட்டும் வீழ்த்தி என்ன பயன்? 

நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத் தூக்கிக் கொண்டுதான் ஊளையிடும். அதுபோன்று இலங்கையில் சரத் வீரசேகர என்ற அரசியல்வாதி இப்போது காணப்படுகிறார். 

பொலிசாரின் அத்துமீறல், படையினரின் காணி அபகரிப்பு, தமிழர் பிரதேசங்களில் சட்டத்தை மீறி புதிய விகாரைகளை நிர்மாணித்தல் என்பவற்றைக் கண்டித்து எவர் கருத்துக் கூறினாலும் அதை இனவாதமாக்கி ஊதிப் பெருப்பிப்பது இவர் வேலை. 

கடற்படைத் தளபதியாகவிருந்து ஓய்வு பெற்ற இவர் கோதபாயவின் வியத்மக வட்டத்தினூடாக அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். எஜமான் காணாமல் போனபின்னரும் அந்த எஜமான் விசுவாசத்தில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்க விரும்புபவர் இவர். கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்ட கே.எம்.பி.ராஜரட்ண, சிறில் மத்தியு, காமினி திசநாயக்க போன்ற இனவாதிகளின் ஒட்டுமொத்த வடிவமாக தம்மைக் காட்டிக் கொள்ள முனையும் இவரது நிகழ்கால எறிகல்லின் இலக்கு கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ. 

கடந்த மாத முள்ளிவாய்க்கால் நினைவை முன்னிட்டு கனடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் இனஅழிப்பு என்று குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகத்தை இவரால் ஜீரணிக்க முடியவில்லை. கனடிய பிரதமரின் அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்ள உடனடியாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரத்துக் குரல் கொடுத்துள்ளார் சரத் வீரசேகர. இதனை செய்யத் தவறினால் பல உலக நாடுகள் இனப்படுகொலை பிரகடனத்தை ஆதரிக்கும் என்பது இவர் விடுக்கும் பயமுறுத்தல். 

இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்குட்பட்ட வடமாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியதை இவர் மறந்துவிட்டார். ஒன்ராறியோ சட்டசபை 2021ல் இதே பிரேரணையை நிறைவேற்றியரதையும், அதனை எதிர்த்து சிங்கள அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கை ஒன்ராறியோ உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் இவர் மறந்துவிட்டார். 

மகிந்த ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு போர்க்குற்ற அடிப்படையில் கனடா பயணத்தடை விதித்ததையும் இவர் மறந்துவிட்டார். ராணுவ உயர் அதிகாரி சவேந்திர சில்வா உட்பட சில படை அதிகாரிகளுக்கு போர்க்குற்ற காரணத்தால் அமெரிக்கா தடை விதித்ததையும் இவர் மறந்துவிட்டார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவை போர்க்குற்றத்தை மையப்படுத்தி அங்கத்துவ நாடுகளின் ஆதரவுடன் தீர்மானங்களை நிறைவேற்றுவதையும்கூட இவர் மறந்துவிட்டார். 

தமது அரசியல் இருப்புக்காகவும் சிங்கள பௌத்த தலைமைக்காகவும் கனடிய பிரதமரை இவர் இலக்கு வைத்திருப்பது எந்தவகையிலும் பயனளிக்காது என்பதை தெரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படாது. 

இது ஒருபுறமிருக்க, தமிழரசுக் கட்சியினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் மீண்டும் ஆரம்பித்திருக்கும் சுத்துமாத்துப் பேச்சுவார்த்தையும், தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் குத்துவெட்டு காய்நகர்த்தல்களும் அண்மைய நாட்களின் முக்கிய சமாசாரங்கள். 

ரணிலுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுகளின்போது திரு. சம்பந்தன் கோபத்தின் உச்சியில் கொதித்து கொப்பளிக்கக் காணப்பட்டார். 'ரணில் அவர்களே! இனியும் எங்களை பேய்க்காட்ட வேண்டாம். உங்களின் செப்படி விளையாட்டை நாங்கள் அறிவோம்" என்பதை, அரசியல் நாகரிகமாக 'பொறுமையை நாங்கள் இழந்துவிட்டோம். தொடர்ந்தும் நாங்கள் ஏமாறத் தயாரில்லை" என்று நேருக்கு நேர் நெற்றியடியாக சம்பந்தன் கூறியது கொஞ்சமும் எதிர்பார்க்காதது. 

ஆனால், இதனை ஆச்சரியமாகவோ கோபமாகவோ ரணில் காட்டிக் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாக யூலை மாத இறுதிக்குள் இரண்டு நாட்கள் பேசி முக்கியமான விடயங்களுக்கு தீர்வைக் காண்போம் என்று கூறியவர், அதன் அடிப்படையில் அதற்குப் பின்னரும் தீர்வு காணாவிடின் என்னை நீங்கள் எப்படியும் பேசலாம் என்று கூறி விவகாரத்துக்கு முடிவு கட்டினார். 

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்த ரணில், இப்போது யூலை மாதத்தில் தீர்வு எட்டும் என்று கூறி சம்பந்தனை ஷகூல்| பண்ணியுள்ளார். 

இதனை எழுதும்போது, 1980களில் சாவகச்சேரி எம்.பி.யாகவிருந்த வி.என்.நவரத்தினம் அவர்களுக்கும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் உரையாடல் நினைவுக்கு வருகிறது. இதனை இப்பத்தி எழுத்தாளரிடம் நவரத்தினம் அவர்களே கூறியிருந்தார். 

'நீங்கள் தமிழர்களுக்கு எதிராக பல தடவை தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருவதால் எங்கள் மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள். உங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதையும் அவர்கள் விரும்பவில்லை" என்று திரு. நவரத்தினம் தெரிவித்தபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த பதில் பின்வருமாறு இருந்தது. 

'நீங்கள் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழில் ஆற்றும் உரைகளை சிங்கள பத்திரிகைகள் பிரசுரிக்கக்கூடாது. அதுபோன்று நான் சிங்களத்தில் சிங்கள மக்களுக்கு ஆற்றும் உரைகளை தமிழ் பத்திரிகைகள் பிரசுரிக்கக்கூடாது. நாங்கள் இருவரும் எங்கள் கட்சிகளின் வாக்கு வங்கியை காப்பாற்றவும், அதிகரிக்கச் செய்யவுமே இவ்வாறு பேசுகிறோம்" என்று ஜே.ஆர் சொன்னபோது தாம் வாயடைத்துப் போனதாக நவரத்தினம் எம்.பி. சொன்னார். 

தமிழரசுக் கட்சிக்கும் ரணிலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது சம்பந்தன் சண்டமாருதமாக வீசிய எச்சரிக்கையையும் சவாலையும் ஜே.ஆர். கூறியது போன்று நோக்கினாலும் அதில் பிழையிருக்க முடியாது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டு, தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டியில் பல கூறுகளாகி, தமிழரசின் வாக்கு வங்கி சிதறுண்டு போகும் நிலையில் அதனை காப்பாற்றுவதற்காகத்தான், பொறுமையை இழந்துவிட்டோம், தொடர்ந்து ஏமாறத் தயாரில்லை என்று சம்பந்தன் கூறியது தமிழர்கள் மத்தியில் பரப்பப்பட்டுவிட்டது. சம்பந்தன் எதிர்பார்த்ததும் நிறைவேறியிருக்கலாம். 

பசுத்தோல் போர்த்த சிங்கமான ரணிலையும் அவரது சாமர்த்திய ராஜதந்திர நகர்வையும், அவருக்கே இயல்பான செயற்பாட்டையும் அறிந்தவர்களுக்கு ஒன்று நன்கு புரியும். சிங்களத் தரப்பை மீறி, பௌத்த பீடத்தை எதிர்த்து தமிழருக்கு எந்தத் தீர்வையும் அவர் வழங்கப்போவதில்லை. இதனை அறிய வேண்டுமெனில் அண்மைய நாட்களில் சிங்களத் தரப்பில் வெளியான சில தகவல்களை உற்று நோக்க வேண்டும். 

வடமாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் எதனையும் வழங்கும் தீர்மானம் இல்லையென்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார். 

வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டுவதை நிறுத்துவதாக எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லையென தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர முனதுங்க அறிவித்துள்ளார். 

பதின்மூன்றாவது திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டுமென மகிந்த ராஜபக்ச அணியின் முக்கியஸ்தரான ரோஹண அபயகுணவர்த்தன கோரியுள்ளார். 

மாகாண சபைகளுக்கு இப்போது தேர்தல் இல்லை. இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படலாமென அரச தரப்பிலிருந்து மெதுவாக ஒரு தகவல் கசிய விடப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்புகள் அன்று ஜெ.ஆர். சொன்னதுபோல சிங்கள மக்களுக்கானதல்ல. இது முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கானது. இதுதான் ரணிலின் அரசியல். 

அடுத்து, திருமலையின் எதிர்கால எம்.பி. என்று பரவலாகப் பேசப்பட்டு வந்த கனடா குகதாசனுக்கு நேர்ந்த கதி - கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதனால் பலருக்கும் இது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. 

கனடாவில் நீண்டகாலம் வாழ்ந்து வந்தவர் குகதாசன். இங்குள்ள தமிழர் அமைப்பொன்றில் பணி புரிந்தவாறு தமிழ் ஆசிரியராகவும் இருந்தவர். தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பிரதானியாக கனடாவில் செயற்பட்டவர். இக்கட்சிகளின் தேர்தலுக்கும் வேறு பணிகளுக்கும் நிதி சேகரித்து வழங்கி அந்த வட்டத்துள் முக்கியமானவராக தம்மை உயர்த்திக் கொண்டவர். ஆனால் கனடிய தமிழர் சமூகத்தில் இவருக்கு பெருமளவில் நற்பெயர் இருந்ததில்லை. 

கடந்த பொதுத்தேர்தலில் எவ்வாறாவது எம்.பி.யாக வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை திரும்பி சம்பந்தனின் ஆசீர்வாதத்தோடு திருமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர். தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லையாயினும் சம்பந்தனின் வலதுகரமாக அதன் பின்னர் செயற்பட்டவர். 

திருமலை மாவட்டத்தில் கூட்டமைப்பின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்ததால் சம்பந்தனின் பின்னர் (?) தாமே எம்.பி. என்ற நினைப்பில், சம்பந்தனின் சுகவீனத்தை தமக்கு வசதியாக்கி சம்பந்தனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டவர் குகதாசன் என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. 

இவ்விடயங்களை நன்கு தெரிந்து கொண்டும் இதுவரை பொறுத்துப் பார்த்த சம்பந்தன், இனி முடியாதென்ற நிலைமையில் குகதாசனுக்கு கல்தா கொடுத்துவிட்டார். தமது பிரத்தியேக இணைப்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் தமது கடமைகளை முன்னெடுக்கவும் திருமலை நகராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.இராசநாயகத்தை சம்பந்தன் இப்போது நியமித்துள்ளார். 

குகதாசனை இப்போது பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பாக தமிழரசுக்காரர்கள் பரிதாபத்தோடு பார்க்கின்றனர். சம்பந்தன் இப்போது தம்மீது வீசப்பட்ட அம்பை மட்டும் பிடுங்கி எறிந்துள்ளார். இந்த அம்பை எய்தவர் மீது எப்போது சம்பந்தன் கை வைப்பார்? அந்த நாளையே தமிழரசின் உள்வட்டத்தினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். 

No comments